விலைவாசி உயர்வால் மக்கள் துன்புறும்போது ஜப்பானில் முரசு வாசிக்கிறார் மோடி: ராகுல் காந்தி தாக்கு

“”மின் பற்றாக்குறை, விலைவாசி உயர்வால் மக்கள் துன்பப்படும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானில் முரசு வாசித்துக் கொண்டிருக்கிறார்” என்று பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமேதியில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:

தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய வாக்குறுதிகளை அளித்ததன் மூலம் ஆட்சியைப் பிடித்தார். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்த பிறகும் கூட, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான பணிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு துவங்கவில்லை.

அவர்கள் தேர்தலின்போது, நாட்டை மாற்றிக் காட்டுவோம், விலைவாசியைக் குறைப்போம், ஊழலைக் குறைப்போம் என்றெல்லாம் வாக்குறுதிகளை வாரி வழங்கினார்கள்.

ஆனால், இப்போது அந்த வாக்குறுதிகளை முற்றிலும் மறந்தேபோய் விட்டனர் என்று ராகுல் காந்தி கூறினார்.

“”ராகுல் பேச்சை காங்கிரஸ் கட்சியினர் கூட கவனிப்பதில்லை”: பிரதமர் நரேந்திர மோடியைத் தாக்கி ராகுல் காந்தி பேசியிருப்பதற்கு தில்லியில் பதில் அளித்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, “”ராகுல் காந்தியின் பேச்சை காங்கிரஸ் கட்சியினர் கூட கவனிப்பதில்லை. நாங்கள் ஏன் அவரது பேச்சை கவனிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் நளின் கோலி கூறியதாவது:

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கோமா நிலையில் இருந்தது. நீங்களோ (ராகுல் காந்தி) நாடாளுமன்றத்திலேயே தூங்குகிறீர்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமர் மோடி அரும்பாடுபட்டு வருகிறார். நாட்டில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அவர் தீர்வு காண்பார் என்று அவர் கூறினார்.

TAGS: