ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத வெள்ளம்: பலி எண்ணிக்கை 116ஆனது

  • ஜம்மு பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களை படகு மூலம் சனிக்கிழமை மீட்டு வரும் ராணுவ வீரர்கள்.
  • ஜம்மு பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களை படகு மூலம் சனிக்கிழமை மீட்டு வரும் ராணுவ வீரர்கள்.
  • ஸ்ரீநகரில் வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
  • ஸ்ரீநகரில் வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதன்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அந்த மாநிலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இந்த வெள்ளம், அதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் ஆகியவற்றில் சிக்கி, சனிக்கிழமை வரை அந்த மாநிலத்தில் 116 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா, அனந்த்நாக், குல்காம் உள்பட பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தினால் இதுவரை 2,500 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 450 கிராமங்கள் நீரில் முற்றிலும் மூழ்கியுள்ளன. 1,225 கிராமங்கள் பகுதியளவு நீரில் மூழ்கியுள்ளன. 50 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. எண்ணற்ற அளவிலான வீடுகள், சாலைகள் சேதமடைந்துள்ளன.

வானிலை தெளிவாகும் பட்சத்தில், நீரில் மூழ்கியுள்ள கிராமங்களில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மக்களை மீட்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என்று முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

இடைவிடாது பெய்து வரும் மழையால் ஜீலம், சிந்து உள்ளிட்ட முக்கிய நதிகள், கிளை நதிகளின் நீர்மட்டம் அபாயக் குறியீட்டைத் தாண்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கரையோரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர்.

வெள்ளத்துக்கு இதுவரை ஜம்மு பகுதியில் 106 பேரும், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் 10 பேரும் உயிரிழந்தனர். இதில், ஜம்முவில் சனிக்கிழமை மட்டும் 28 பேர் உயிரிழந்தனர்.

பேருந்து பலி-35ஆக உயர்வு: ரஜௌரியில் கடந்த வியாழக்கிழமை வெள்ளத்தில் 63 பேருடன் அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்த 10 பேரின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன. இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.

11,000 பேர் மீட்பு: மீட்புப் பணியில், தேசிய பேரிடர் மீட்புப் படைகளைச் சேர்ந்த 8 குழுக்களும், 6 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 11,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

“வெள்ள அபாயம் மிக்க பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தாற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தாற்காலிக முகாம்கள் அமைக்க அவசரமாக 25,000 கூடாரங்களும், 40,000 போர்வைகளும் தேவைப்படுகின்றன’ என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்தில் சிக்கிய ராணுவ வீரர்கள்: இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் 9 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பாம்போர் பகுதியில் ஜீலம் ஆற்றில் ராணுவக் குழு ஒன்று படகில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. ஆற்று வெள்ளத்தில் ஏற்பட்ட சுழல் காரணமாக அவர்கள் சென்ற படகு நீரில் கவிழ்ந்தது.

இதனால், அதில் இருந்த ராணுவ வீரர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 11 பேர் நீந்திக் கரை சேர்ந்தனர். வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 9 வீரர்களில் 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். எஞ்சியுள்ள 2 வீரர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்று அந்த ராணுவ அதிகாரி கூறினார்.

காங்கிரஸ் வேண்டுகோள்: இதனிடையே, ஜம்மு – காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆஸாத் தொலைபேசி மூலம் பிரதமர் நரேந்திர மோடியிடம் சனிக்கிழமை கேட்டுக் கொண்டார்.

பிரதமர் இன்று செல்கிறார்

ஜம்மு-காஷ்மீரில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அந்த மாநிலத்துக்குச் செல்கிறார்.

முதலில் ஜம்முவிற்குச் செல்லும் அவர், அங்கு விமானத்தில் இருந்தபடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகிறார். அதன் பின், காஷ்மீர் சென்று அங்குள்ள நிலைமை குறித்து ஆராய உள்ளார் என அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டார். அவருடன் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய பணியாளர்கள் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

அத்துடன், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கையாள்வது குறித்து ஸ்ரீநகரில் முதல்வர் ஒமர் அப்துல்லாவுடன் ராஜ்நாத் சிங் கலந்தாலோசித்தார். அப்போது மாநில அமைச்சர்கள், மாநில அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெள்ளம் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இதுபோன்ற வெள்ளம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. வெள்ள பாதிப்புகளை சமாளிக்க மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். மீட்புப் பணிகள் நடைபெற நிதித் தேவை ஒரு தடையாக இருக்காது. வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள சேதத்தைக் கணக்கிட அமைச்சகங்களுக்கு இடையேயான குழு இங்கு அனுப்பி வைக்கப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜம்மு-காஷ்மீருக்கு உதவுமாறு மற்ற மாநிலங்களிடமும் கோரப்படும். தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 8 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 75-100 வீரர்கள் அடங்கிய 100 ராணுவக் குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்: வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பேரிடர் சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்காக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள தொகையில் 90 சதவீதமான ரூ.1,100 கோடியை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

TAGS: