இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது

terroristdதில்லி ஜாமா மசூதியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில், இந்தியன் முஜாஹிதீன் (ஐ.எம்.) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் அஜாஸ் ஷேக்கை, தில்லி தனிப்பிரிவு காவல்துறையினர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் தனிப்பிரிவு சிறப்பு ஆணையர் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா சனிக்கிழமை கூறியதாவது:

உத்தரப்பிரேதச மாநிலம், சஹாரன்பூரில் சில தினங்களாக அஜாஸ் ஷேக் பதுங்கியிருந்ததாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை காவல்துறையினர் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். தீவிர தேடுதலுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை இரவு அஜாஸ் ஷேக் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரைச் சேர்ந்த இவர், 2010-இல் நடந்த ஜாமா மசூதி தாக்குதல், அதே ஆண்டில் புணேவில் நடைபெற்ற ஜெர்மன் பேக்கரி தாக்குதல், 2008-இல் தில்லி பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் சம்பவம் உள்பட இந்தியாவில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைவராகத் தேடப்பட்டு வந்தவர்.

இவர் ஐ.எம். அமைப்பின் முக்கிய உறுப்பினர் எனச் சந்தேகிக்கிறோம். அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் பெயரில் போலியாக அடையாள அட்டை வடிவமைத்துத் தருவது, மின்னணு சாதனங்களைத் தயாரிப்பது போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகவும் தொழில்நுட்பத் திறன் வாய்ந்தவராகவும் அஜாஸ் கருதப்படுகிறார்.

தில்லியில் 2010-இல் ஜாமா மசூதி பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பிறகு அதற்கான பொறுப்பை ஏற்பதாக சில ஊடக நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவலை அஜாஸ் ஷேக் அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்தது.

சஹாரன்பூரில் கைது செய்யப்பட்ட அவர், தில்லி நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற அனுமதியுடன் அவரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்’ என்றார் அவர்.

கடந்த இரு ஆண்டுகளில் ஐ.எம். அமைப்பைச் சேர்ந்த பலரை தில்லி காவல்துறையும் தேசியப் புலனாய்வு அமைப்பும் கைது செய்துள்ளன. இந்த நிலையில் அஜாஸ் ஷேக், போலீஸிடம் பிடிபட்டுள்ளது ஐ.எம். அமைப்புக்கு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மேலும், இந்தியாவில் ஜிஹாத் (புனிதப் போர் என்ற பெயரில் தாக்குதல்கள்) நடத்த “காய்தாத் அல் ஜிஹாத்’ என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக “அல் காய்தா’ பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அறிவித்துள்ளார். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டிருந்த நிலையில், அஜாஸ் ஷேக் கைது நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

TAGS: