காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை கொட்டியது. சிந்து நதியின் கிளை ஆறுகளான ஜீலம், ஜீனாப், தாவி நதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தெற்கு காஷ்மீர் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தின் மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டு இங்குள்ள 450 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் மாநிலம் சென்று விமானத்தில் இருந்தவாறு ஜம்மு பகுதியில் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டார். ஸ்ரீநகரில் முதல்– மந்திரி உமர் அப்துல்லா மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் வெள்ளச் சேத விவரங்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’இது தேசிய அளவில் நிகழ்ந்த பேரழிவாகும். இப்பேரழிவில் ஜம்மு பகுதியில் ஏராளமான மக்கள் பலியாகியுள்ளனர். மாநில அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களை தொடர்பு கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், தடைபட்டுள்ள மின்சப்ளையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினரிடம் தற்போதைய நிலவரம் குறித்து விவாதித்தேன். அதன் பின்னர் ஸ்ரீ நகரில் உள்ள நிலவரம் குறித்து தெரிந்து கொண்டேன். எனினும் தற்போது நிவாரணம் மட்டும் தான் முக்கிய தேவையாகும்.
மாநில அரசுக்கு மத்திய அரசுக்கு முழு உதவி அளிக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க பாடுபடும். தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்படும். மக்களை மீட்க தேவையான படகுகளும் அனுப்பி வைக்கப்படும்.
ஹெலிகாப்டர் உதவியுடன் மக்களை மீட்கும் பணியும் துரிதப்படுத்தப்படும். பிரதம மந்திரி நிதியிலிருந்து 1 லட்சம் போர்வைகளை வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்துள்ள நிதியுதவியுடன் கூடுதலாக 1000 கோடி ரூபாயை அரசு நிதி உதவியாக வழங்கும் என உறுதியளிக்கிறேன் என மோடி கூறினார்.