குழந்தை திருமணம் கற்பழிப்பை விட கொடுமையானது: டில்லி கோர்ட் கடும் கண்டனம்

child-marriageபுதுடில்லி: ‘சிறார்களுக்கு திருமணம் செய்து வைப்பது, கற்பழிப்பு குற்றத்தை விட கொடுமையானது; கேவலமானது’ என, டில்லி கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

டில்லியை சேர்ந்த பெற்றோர், தங்கள் மகளின் கணவர் மற்றும் அவரின் உறவினர்கள், வரதட்சணை கேட்டு மிரட்டுவதாகவும், தங்கள் மகளை கொடுமைப்படுத்துவதாகவும் போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணை: இந்த வழக்கு, டில்லி மெட்ரோபோலிடன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு, 2011ல் திருமணம் நடந்துள்ளது. அப்போது அவளின் வயது, 15. சிறுமியை திருமணம் செய்தது மட்டுமின்றி, அவளின் பெற்றோரிடம், மாப்பிள்ளை வீட்டார், 3.50 லட்சம் ரூபாய் வரதட்சணையாக பெற்றுள்ளனர். இந்நிலையில், தற்போது, மேலும், 50 ஆயிரம் ரூபாய் கேட்டு, பெண்ணை கொடுமைப்படுத்தியதாக, அவளின் பெற்றோர், புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி, ஷிவானி சவுகான், கூறியதாவது:
குழந்தைத் திருமணம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்செயல் பாலியல் பலாத்காரம் செய்வதை விட கொடுமையானது; கேவலமானது. மணப் பெண் சிறுமி எனத் தெரிந்தும் அவளை திருமணம் செய்த அவளின் கணவர் மற்றும் திருமணம் செய்து கொடுத்த அவளின் பெற்றோர் பெரும் குற்றம் புரிந்துள்ளனர்.குழந்தைத் திருமணங்களில், இரு தரப்பினராலும் தவறிழைக்கப்படுகிறது. பெண் குழந்தைகள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். அவர்களுக்கு உரிய வயது பூர்த்தியான பின்பே திருமணம் செய்யப்பட வேண்டும்.

கல்வி கற்க: இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட சிறுமி, அவர் விரும்பும் வரை கல்வி கற்க, இரு வீட்டாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவளின் படிப்புச் செலுவுக்காக, மாதம், 4,000 ரூபாயை இரு குடும்பத்தாரும் சேர்ந்து அளிக்க வேண்டும். அவளின் படிப்பு முடியும் வரை அவளை அரசு காப்பகத்தில் தங்க வைக்க உத்தரவிடுகிறேன்.இரு குடும்பத்தார் மீதும், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிடுகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

TAGS: