எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து முடியுங்கள்! மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்!

indiaபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நாளில் இருந்து ஒரு வருடத்திற்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 10–ந் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

 

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கடந்த வாரம் உயர்மட்ட குழு கூடி ஆலோசித்தது. அந்த கூட்டத்தில் இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதுவது என்று முடிவு செய்யப்பட்டது.

 

அதன்படி இப்போது ராஜ்நாத் சிங் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல் அமைச்சர்களுக்கும், உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் தனித்தனி கடிதங்கள் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

 

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது ஏதாவது வழக்குகள் நிலுவையில் இருந்தால், அரசு வக்கீல்கள் சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் அந்த வழக்குகளை விரைவாக தினந்தோறும் விசாரணை அடிப்படையில் நடத்தி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள காலகட்டத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை சமர்ப்பிக்க வேண்டும்.

 

அரசு வக்கீல்கள் பற்றாக்குறை இருந்தால் மாநில அரசுகள் சிறப்பு அரசு வக்கீலை நியமித்து, அரசு வக்கீல்கள் இல்லாததால் வழக்கு தாமதமாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த வழக்குகள் விரைவாக விசாரணை நடப்பதை தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

TAGS: