திருவள்ளுவர் பிறந்தநாளைக் கொண்டாட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
மத்திய அரசுத் துறைகளில் நாட்டின் தேசிய மொழியான ஹிந்தியை பயன்படுத்துவது குறித்தும், அலுவல் மொழியாக ஹிந்தியை நாடு முழுவதும் பயன்படுத்த வகுக்கப்படும் கொள்கை முடிவுகள் குறித்தும் அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு, மத்திய அரசுக்கு யோசனைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை கூடியது. மொத்தம் 30 பேர் கொண்ட இக்குழுவில் மக்களவையில் இருந்து 20 பேரும் மாநிலங்களவையில் இருந்து 10 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் தலைவராக உள்ளார். முதலாவது கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குழுவின் தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, குழுவின் செயல் திட்டம், எதிர்கால பணிகள் குறித்து இறுதி செய்வது பற்றி உறுப்பினர்கள் விவாதித்தனர். இக்குழுவில் இடம் பெற்றுள்ள உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் பேசுகையில், “அலுவல் மொழியாக நாம் ஹிந்தியை பயன்படுத்தி வருகிறோம். அதே சமயம், நாட்டின் தொன்மையான மொழியாக தமிழ் விளங்குகிறது. அது போல பல மாநிலங்களின் மொழிகளும் தனிச்சிறப்புடன் விளங்குகின்றன. அவற்றுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். உலகின் மிகவும் பழமையான மொழியாக தமிழின் அடையாளமாக திருக்குறள் போற்றப்படுகிறது. உலகப் பொது மறையாக திகழும் அதை எழுதியவர் திருவள்ளுவர். அவரது பிறந்த நாள் ஜனவரி மாதத்தில் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழுக்கும், திருவள்ளுவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மத்திய உள்துறையின் உயர் அமைப்பாகக் கருதப்படும் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். இதன் மூலம் பல மொழிகள் பேசப்படும் இந்தியாவில் அனைவருக்கும் மத்திய அரசு அங்கீகாரம் அளிக்கும் செய்தியை நாட்டுக்கு நம்மால் உணர்த்த முடியும்’ என்றார்.
இதையடுத்து, ராஜ்நாத் சிங் பேசுகையில், “தருண் விஜயின் கருத்து வரவேற்புக்குரியது. அவரது யோசனையை நாம் நிச்சயம் பரிசீலிக்க வேண்டும். அடுத்த கூட்டம் நடைபெறும் போது இந்த விவகாரத்தில் உரிய முடிவெடுக்கப்படும்’ என்றார்.
பின்னர் திருவள்ளுவரின் சிறப்புகளை விளக்கிய தருண் விஜய், வட மாநிலங்களில் உள்ள சுமார் 500 பள்ளிகளில் திருக்குறளின் பெருமைகளை விளக்கியும், திருவள்ளுவரின் பிறந்த நாளை அடுத்த ஆண்டு கொண்டாடவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். அவரது முயற்சிக்கு ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்தார்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மாநிலங்களவையில் தருண் விஜய் கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திருவள்ளுவர் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று அவர் மாநிலங்களவையில் பேசினார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடமும் அவர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் தனி தமிழ் நாட்டை சிந்திக்க தொடங்கிவிட்டனர்.ஆரியம் தமிழனை திரும்பி பார்க்கிறது.நாம் தமிழையும் இனத்தின் எதிர்காலத்தையும் பாப்போம் .
இங்குள்ள வானொலிகள் ஒவ்வொரு நாளிலும் ஒரு குறளையாவது மக்களுக்கு அர்த்தத்துடன் தெரிவிக்கவேண்டும் –ஒவ்வொரு நாளும்–