சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை (எஃப்.டி.ஐ.) தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அனுமதிக்காது என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்தியில் புதிய அரசு அமைந்து கடந்த 2ஆம் தேதியுடன் 100 நாள்கள் நிறைவடைந்தன. இதையொட்டி, வர்த்தகம்,தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில்லை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இந்த விஷயத்தில் எந்தக் குழப்பமும் இல்லை.
இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பதை பாஜக தெளிவாகக் கூறியுள்
ளது. எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இதுபற்றிக் கூறி, அதன் அடிப்படையிலேயே வெற்றி பெற்றுள்ளோம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
முன்னதாக, சில்லறை வர்த்தகத்துறையை அன்னிய நேரடி முதலீட்டுக்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திறந்து விட்டது.
இத்துறையில் 51 சதவீதம் வரை அன்னிய முதலீடு செய்யப்பட அனுமதி அளித்தது. இதை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக எதிர்த்தது.
இந்தியாவில் அரசியல்ரீதியில் முக்கியத்துவம் பெறும் சில்லறை விற்பனைத் துறையானது பல லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. பல்லாயிரம் குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு, சில்லறை விற்பனையில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்துள்ளபோதிலும், இத்துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முந்தையை அரசின் கொள்கையை அது இன்னும் ரத்து செய்யவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, சில்லறை வணிகத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு ஒரேயொரு அனுமதி மட்டுமே தரப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்கோ நிறுவனத்துக்கே அந்த அனுமதி கிடைத்தது.