கந்து வட்டித் தொழில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வழிமுறைகளை மேற்கொள்ள நீதிமன்றம் ஆணை

கந்து வட்டித் தொழிலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கந்து வட்டி பிரச்னையால் மக்கள்படும் சிரமம் குறித்து தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யக் கோரி நீதிபதி

என்.கிருபாகரன் கடந்த ஆண்டு, தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தானாக முன்வந்து உயர் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்தது. அதில், கந்து வட்டி தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அவற்றைத் தடுப்பதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? கந்து வட்டித் தடுப்புச் சட்டம் 2003-ஐ கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக மூத்த வழக்குரைஞர் ஆர்.முத்துக்குôமரசாமியை நியமித்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மூத்த வழக்குரைஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, இல்லையா என்பதை கண்காணிக்க மாவட்டம், தாலுகா அளவில் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.

மேலும், கந்து வட்டி சட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற இரண்டு ஆலோசனைகளைப் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கந்து வட்டி பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் நியமித்த உதவியாளரும் இரண்டு பரிந்துரைகள் நீதிமன்றத்துக்கு அளித்துள்ளார்.

அதன்படி, கந்து வட்டியால் பாதிக்கப்படும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனைத்து ஊடகங்களிலும் விளம்பரங்கள் செய்ய வேண்டும். திரையரங்கங்களிலும் இந்தச் சட்டம் குறித்து காட்சிகளை ஒளிபரப்ப வேண்டும்.

தவிர, கந்து வட்டி புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கண்காணிக்க மாவட்ட, தாலுகா அளவில் குழு அமைக்க வேண்டும். இதற்காக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

போலீஸாருக்கும் கந்து வட்டி கொடுப்பவர்களுக்கும் இடையே உள்ள உறவுகளை முறியடிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணைகளை போலீஸ் ஆணையர், எஸ்.பி. ஆகியோர் கண்காணிக்க வேண்டும்.

இது குறித்து தொடர்ந்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், கந்து வட்டித் தொழிலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்த உத்தரவை பின்பற்றியதற்கான அறிக்கையை நவம்பர் 15-ஆம் தேதி தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: