ஒபாமாவை இரு நாள்கள் சந்திக்கிறார் மோடி

“அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகையில் வரும் 29,30ஆம் தேதிகளில் சந்திக்கவுள்ளார்’ என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் தனது அமெரிக்கப் பயணத்தில் அதிபர் ஒபாமாவை இரு முறை சந்திக்க உள்ளது அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் எர்னஸ்ட், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒபாமா எதிர் நோக்கியுள்ளார்.

அமெரிக்காவுக்கு வரும் மோடி, ஒபாமாவை வெள்ளை மாளிகையில் 29,30ஆம் தேதிகளில் சந்தித்துப் பேசுகிறார்.

இந்தியா, அமெரிக்கா கூட்டுப் பங்களிப்புடன் இரு நாடுகளும் பயன்பெறும் வகையில், மோடியுடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்ற ஒபாமா காத்திருக்கிறார்.

இரு நாடுகளும் நீண்ட காலம் பயன்பெரும் வகையில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறைகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, கூட்டு நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பாக இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

மேலும், ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் ஆகிய நாடுகளின் தற்போதைய பிரச்னைகளுக்கு அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்பட்டு நல்ல தீர்வை ஏற்படுத்த முடியும் என்பதால், அந்தப் பிரச்னைகள் குறித்தும் ஒபாமாவும், மோடியும் விவாதிப்பார்கள் என்று ஜான் எர்னஸ்ட் கூறினார்.

குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்த கலவரத்தையடுத்து, நரேந்திர மோடிக்கு அமெரிக்கா கடந்த 2005ஆம் ஆண்டு விசா வழங்க மறுத்து விட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மோடி பிரதமரானதும், அவரை அமெரிக்கா வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்தார்.

TAGS: