வெள்ளத்தில் சீர்குலைந்த காஷ்மீர்; நிஜ ஹீரோக்கள் ராணுவ வீரர்களே !

Kashmir-Flooding-armykashmir-armyஸ்ரீநகர்: தங்களது உயிரையும் துச்சமென மதித்து, காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் செய்து வரும் மீட்புப்பணிகள் அம்மாநிலத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது வரை விரோதிகளாக பார்க்கப்பட்டு வந்த இந்திய ராணுவத்தினர், தற்போது காஷ்மீர் மக்களால் ஹீரோக்களாக பார்க்கப்பட்டு வருகின்றனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்த 60 ஆண்டுகளில் பார்த்திராத கனமழை மற்றும் வெள்ளத்தால் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. ஓயாமல் பெய்யும் மழை, காணும் இடங்களில் எல்லாம் வெள்ளக்காடு என மக்கள் பீதியில் உறைந்திருக்க, அவர்களை காப்பாற்ற களம் இறங்கியது இந்திய ராணுவம். இந்திய ராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், கடற்படை இவற்றுடன் துணை ராணுவப்படையினரும் மீட்புப்பணிகளில் களமிறங்கினர். மீட்புப்பணிகளில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது இதுவரை ஆயிரக்கணக்கானவர்களை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். நிலைமை சீரடைந்தால் இதே மக்கள், தங்களை நோக்கி கல் எறிவார்கள் என்று தெரிந்திருந்தும், அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் மீட்புப்பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இதுவரை 30 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட 61 விமானங்கள் மூலமாக உணவு, மருந்து, துணிகள் மற்றும் அத்தியாசிய பொருட்கள் காஷ்மீர் மக்களுக்கு சென்றடைந்துள்ளன.மேலும் 200 படகுகளும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. வீடுகளில் மொட்டை மாடிகளில் நின்று மீட்புக்காக தவிக்கும் மக்களையும் இந்திய ராணுவம் காப்பாற்றி வருகிறது. தங்களை காப்பாற்றிய ராணுவத்தினருக்கு மக்கள் jammu4கண்ணீருடன் நன்றி தெரிவிப்பது நெஞ்சை நெகிழ வைப்பதாக உள்ளது. இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் நேற்று அளித்த பேட்டி ஒன்றில், காஷ்மீரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைசி நபர் மீட்கப்படும் வரை இந்திய ராணுவம் ஓயப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

jammu5இந்நிலையில், காஷ்மீரை காப்பாற்றவே அவதரித்ததாக கூறிக்கொள்ளும் ஹூரியத் மாநாடு உள்ளிட்ட பிரிவினை வாதிகள் ஒருவரையும் மீட்புப்பணிகளில் பார்க்க முடியவில்லை என காஷ்மீர் மக்கள் கூறுகின்றனர். அவர்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஓடி ஒளிந்து விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதே போல், பொதுமக்களின் கோபம் ஜம்மு காஷ்மீரை ஆளும் ஓமர் அப்துல்லா மீதும் திரும்பியுள்ளது. மீட்புப்பணிகளில் வேகம் காட்டாதது மட்டுமல்லாமல், கடும் மழை வெள்ளம் குறித்த எவ்வித எச்சரிக்கையும் அளிக்காமல், மாநில அரசு மெத்தனப்போக்குடன் இருந்து விட்டதாகவும், அதன் காரணமாக தாங்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சில காஷ்மீரிகள் உதவிக்கரம் நீட்டினாலும் அவர்களது உதவி ஒரு குறுகிய எல்லைக்குட்பட்டதாகவே உள்ளது.

காஷ்மீர் மனங்களை வென்ற இந்திய ராணுவம் : மேலும் சில இடங்களில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவத்தினரின் இறப்பைக் கொண்டாடும் கேவலமும் அங்கு அரங்கேறி வருகிறது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ராணுவத்தினர் தங்களது பணிகளை செவ்வனே செய்து வருகின்றனர். காஷ்மீர் மழை வெள்ளம் ஒரு பக்கம் மக்களுக்கு துன்பத்தைக் கொடுத்தாலும், இதன் மூலம் இந்திய ராணுவத்தின் மீது அவர்கள் வைத்திருந்த அவநம்பிக்கையை பெருமளவு போக்கி விட்டது என்றே கூறலாம். மொத்தத்தில் இந்திய ராணுவத்தினர் காஷ்மீர் மக்களின் மனதை வென்று விட்டனர் என்றே கூறலாம்….

TAGS: