பாகிஸ்தான் உளவாளி சென்னையில் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இலங்கையைச் சேர்ந்த அருள் செல்வராஜன் என்பரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) சென்னையில் புதன்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தூண்டுதலின் பேரில் இலங்கையைச் சேர்ந்த சிலர் உளவு பார்ப்பதற்காக தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பதாகவும் அவர்கள் பாகிஸ்தானுக்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தேசியப் புலனாய்வு அமைப்புக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தமிழக போலீஸôர் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த மே மாதம் இலங்கையில் இருந்து வந்த முகமது ஜாஹீர் உசேன் என்பவரை தமிழக க்யூ பிரிவு போலீஸôர் சென்னையில் கைது செய்தனர். அவர் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களைப் புகைப்படம் எடுத்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் சக்தி வாய்ந்த சேட்டிலைட் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் விசாரணைக்காக ஜாஹீர் உசேன் தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், உளவு பார்ப்பதற்காக மேலும் பலர் தென்னிந்தியாவில் ஊடுருவ இருப்பதாகத் தெரியவந்தது.

இந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த அருள் செல்வராஜன் என்பரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் சென்னையில் புதன்கிழமை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதற்காக தமிழகத்துக்குள் நுழைந்திருப்பது தெரியவந்தது. அவர் இலங்கை, இந்திய பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.

சென்னையில் முக்கிய இடங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் உளவு பார்த்திருப்பதும், பல முக்கிய இடங்களைப் புகைப்படம் எடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர், உளவுத் தகவல்களை இணையதளம் வழியாக ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுக்கு அனுப்பி வந்துள்ளார். அவரிடமிருந்து பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இலங்கையில் அவர் மீது பல குற்ற வழக்குகள் இருப்பதும் இலங்கை போலீஸôரால் அவர் தேடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கடந்த 2012-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரிக்கும் அருள் செல்வராஜனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

TAGS: