பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்துக்கு கடைசி இடம் : விஜயகாந்த் காட்டம்

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்தது சம்பந்தமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், மாற்றம் தந்த தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. மத்திய அரசின் புள்ளியியல் துறை 2012-13 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது என்பது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களாக கருதப்படும் மாநிலங்களெல்லாம். பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருகின்றன.  ஆனால் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய தமிழ்நாட்டை கடைசி இடத்திற்கு கொண்டு சென்றதுதான் ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசின்சாதனையா?

முதலமைச்சர் ஜெயலலிதா 110விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளெல்லாம் வெற்று அறிவிப்புகள் என நிரூபணமாகிறது. ஏழை எளிய மக்களின் வறுமையை பயன்படுத்திக்கொண்டு, கவர்ச்சி திட்டங்களை அறிவித்து, அதை முழுமையாக செயல்படுத்தாமலும், மக்களுக்காக வளர்ச்சி திட்டங்களைப்பற்றி சிந்திக்காமலும் செயல்பட்டதன் விளைவுதான், தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் கடைசிநிலையை நோக்கிச் சென்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிய தொழில் துவங்க நம்மாநிலத்தில் உள்ளவர்களே முன்வருவார்களா என்பது சந்தேகமே!

மேலும் வெளிமாநிலத்திலிருந்தோ, வெளிநாட்டிலிருந்தோ, இந்தநிலையை பார்த்த பிறகு தொழிலதிபர்கள், தமிழ்நாட்டில் தொழில் துவங்க எப்படி முன்வருவார்கள்.

“முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது” என்பதுபோல தமிழகத்தின் உண்மை நிலையை மத்திய அரசின் புள்ளியியல் துறை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளதை, இனியும் தமிழக மக்களிடம் மறைக்க முடியாது. எனவே இனியாவது தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுத்து, பொருளாதார வளர்ச்சியில் கடைகோடியில் இருக்கும் தமிழகத்தை வளர்ச்சிபெறும் மாநிலமாக மாற்ற முன் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

TAGS: