தமிழகம் முழுவதும் செயல்படும் கனிம குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயத்தை நியமனம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் சட்டவிரோதமாகச் சுரண்டப்படுகின்றன. ஆற்று மணல், ஜல்லி, கருங்கல் போன்றவற்றை சட்ட விரோதமாக எடுப்பவர்கள் மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
இது போன்று மதுரையில் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கனிம குவாரிகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அரசுக்கு அறிக்கை அளித்தார். அதன் பேரில் சட்டவிரோத குவாரிகள் குறித்து விசாரணை செய்ய அரசு உத்தரவிட்டது.
அதனால், தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படும் கனிம குவாரிகள் குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும். மேலும், அந்த குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சில கனிம குவாரி நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு வியாழக்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு: தமிழகம் முழுவதும் செயல்படும் குவாரிகளை ஆய்வு செய்வதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமனம் செய்கிறோம்.
அந்தக் குவாரிகளை ஆய்வு செய்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் மூலம் அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் அளவில் இருக்கிறதா என்பதை நாங்கள் அறிய வேண்டும். இந்த நிலையில் இந்த விஷயத்தை ஆய்வு செய்ய மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய நாங்கள் விரும்பவில்லை என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.