தமிழக அரசு தீவிரவாதிகளின் நண்பனாக விளங்குவதாக சுப்பிரமணிய சாமி கருத்து! சீமான் கண்டனம்!

 

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், தமிழக அரசு, தீவிரவாதிகளின் நண்பனாக விளங்குவதாக கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபன் நினைவு தினம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றதை குறிப்பிட்டுள்ளார். அந்தக் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்ததால்தான், தமிழக அரசை தீவிரவாதிகளின் நண்பன் என்று கூறுவதாகவும் சுப்பிரமணிய சாமி குறிப்பிட்டுள்ளார்.

 

சுப்பரமணிய சாமியின் இந்த கருத்துக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சீமான் கூறுகையில்,

 

சுப்பிரமணிய சாமி சிங்கள அமைச்சர் போல செயல்படுகிறார். சிங்கள வெளியுறவுத்துறை அமைச்சர் போல் செயல்படுகிறார். திலீபன் நினைவு நாளை தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படுவது இன்று, நேற்று அல்ல. அது நீண்ட காலமாக நடந்து வருகிறது.

 

இப்போது திடீரென்று இதுபோன்று கூற வேண்டிய தேவை சுப்பிரமணிய சாமிக்கு ஏன் ஏற்படுகிறது என்றால், கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தம், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, ராஜபக்சே போர்க்குற்றவாளி, தனித் தமிழ் ஈழம்தான் இலங்கை தமிழர்களுக்கு ஒரே தீர்வு என்று கூறும் தமிழக அரசுக்கு ஒரு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்று சுப்பிரமணி சாமி இவ்வாறு கூறியிருக்கிறார். இது திட்டமிட்டு சொல்லப்படுகிற ஒரு கருத்து. இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

TAGS: