தமிழகக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

arunசென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்காக தமிழகத்தில் ஊடுருவி உளவு பார்த்த இலங்கையைச் சேர்ந்த அருண் செல்வராஜன் கடந்த புதன்கிழமை சென்னையில் பிடிபட்டார்.

அருண் செல்வராஜனிடம் தேசியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மும்பை தாக்குதல் பாணியில் சென்னையிலும் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது.

இது தவிர சென்னையில் 12 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்த தகவல்களைச் சேகரித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தாக்குதலுக்கு உதவும் வகையில் படங்கள், விடியோ காட்சிகளை எடுத்து, அருண் செல்வராஜன் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் தங்கி இருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும் (ஈவென்ட்) நிறுவனத்தை நடத்தியபடி உளவு பார்க்கும் சதிச் செயலை கடந்த 5 ஆண்டுகளாக அருண் செல்வராஜன் செய்துவந்துள்ளார்.

தமிழகக் கடலோரங்களில் எங்கெங்கு தீவிரவாதிகள் ஊடுருவ முடியும், சென்னையில் எந்தெந்தப் பகுதிகளில் நாசவேலை செய்து விட்டு எளிதில் தப்ப முடியும் என்பன போன்ற தகவல்களை அருண் செல்வராஜன் சேகரித்துள்ளார்.

அருண் செல்வராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை அடுத்து அவர் படம் பிடித்து அனுப்பியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகக் கடலோரப் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இலங்கையில் இருந்து எளிதாக வந்து இறங்கும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையம், கடலோரத் துறைமுகங்கள், முக்கிய ரயில் நிலையங்கள், ராணுவ நிலைகள், வணிக வளாகங்கள் உள்ள தெருக்கள், கோயில்களில் பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய உளவாளியான அருண் சிக்கி இருப்பதால், அவரது கூட்டாளிகள் நாச வேலை முயற்சிகளில் ஈடுபடலாம் அல்லது தமிழகத்தில் இருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்யக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனவே உளவாளிகளுடன் நெருக்கமாக இருப்பவர்களை உளவுப் பிரிவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.

குமரி மாவட்ட கடலோரக் கிராமங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை பகுதிகளிலும் போலீஸார் ரோந்து சுற்றி வருகிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலைய சுற்றுப் புறங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

TAGS: