ஹிந்தியை பிரபலப்படுத்த வேண்டும்: பிரணாப் முகர்ஜி

புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹிந்தி தின விழாவில்,

  • புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹிந்தி தின விழாவில், “இந்திரா காந்தி ராஜபாஷா’ விருதை மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு வழங்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. உடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (இடது).

“இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளைக் காட்டிலும் தனிச்சிறப்பு வாய்ந்த இடத்தில் உள்ள ஹிந்தி மொழியை பிரபலப்படுத்த வேண்டும்’ என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹிந்தி மொழி தின நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சாமானிய மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், அலுவலகங்களில் எளிமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.

அரசியல் சாசனப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 21 இந்திய மொழிகளில் தனிச் சிறப்பு வாய்ந்த இடத்தில் ஹிந்தி உள்ளது. இந்தியாவின் அலுவல் மொழியான ஹிந்தியை பிரபலப்படுத்துவதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்கள் ஆகியவற்றின் இணையதளங்கள் விரைவில் ஹிந்தி மொழியில் உருவாக்கப்படும்.

சாமானிய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில், அரசின் திட்டங்களைப் பற்றிய தகவல்கள் அவற்றில் அளிக்கப்படும்.

இந்தத் தொடக்கத்தின் மூலம், பெரும்பான்மையான மக்களை அரசின் திட்டங்கள் சென்றடையும். இந்தியாவின் பலவகையான கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஹிந்தியை மேம்படுத்த வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

எனவே, நாட்டில் ஜனநாயகம் முன்னேற்றம் அடைவதற்காக, ஹிந்தியையும் மற்ற மண்டல மொழிகளின் பயன்பாட்டையும் அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி பேசினார்.

நிகழ்ச்சியில், ஹிந்தி மொழியை சிறப்பாக பயன்படுத்தி வரும் அரசுத் துறைகளுக்கு பிரணாப் முகர்ஜி, விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

TAGS: