மீனவர் பிரச்சினையில் கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்கிறார் ஜெயலலிதா: தமிழிசை செளந்தரராஜன்

thamilisai_001தமிழக மீனவர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காண்பதற்காக பாஜக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நேற்று தூத்துக்குடியில் அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த நேர்காணலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, மாநகராட்சித் தேர்தலில் தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும், பாஜகவுக்கு மத்தியில் ஒரு நிலைப்பாடு, மாநிலத்தில் ஒரு நிலைப்பாடு என்றும் பேசியுள்ளார்.

இது முற்றிலும் தவறான கருத்து. தமிழக மீனவர் பிரச்சனையில் அவர் கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருந்துவிடுகிறார்.

ஆனால், நாங்கள் பாஜக மாநிலப் பொதுச்செயலர் சரவணப்பெருமாள் தலைமையில் ஒரு குழு அமைத்து, மீனவர்களிடம் கருத்துகளைப் பெற்று, அந்த அறிக்கையை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் அளித்துள்ளோம்.

அறிக்கையைப்  பெற்றுக்கொண்ட அவர், தமிழக மீனவர் பிரச்சினையை நன்கு உணர்ந்திருப்பதாகவும், இதுகுறித்து உறுதியான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காண பாஜக தொடர்ந்து போராடி வருகிறது. மீனவர்  பிரச்னை தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்த சில மணி நேரத்தில் அவரது கருத்து பாஜகவின் கருத்து அல்ல எனத் தெரிவித்தேன்.

பாஜக மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற அர்த்தத்தில் முதல்வர் பேசி வருகிறார் என தமிழிசை செளந்தரராஜன் மேலும் தெரிவித்துள்ளார்.

TAGS: