இடைத்தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தான்-உ.பி.யில் பா.ஜனதாவுக்கு கடும் சறுக்கல்

bjp-flag-_newபுதுடெல்லி, செப். 16- மக்களவைத் தேர்தலின்போது அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜனதா, சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

33 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு 13-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ராஜஸ்தானில் ஆளும் பா.ஜனதா வசம் இருந்த 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் வெய்ர், நசிராபாத் மற்றும் சூரஜ்கர் ஆகிய 3 தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். தெற்கு கோட்டா தொகுதியை மட்டுமே பா.ஜனதா தக்க வைத்துக்கொண்டது.

இதேபோல் மக்களவைத் தேர்தலின்போது அதிக இடங்களைப் பிடித்த உத்தர பிரதேசத்திலும் பா.ஜனதா பின்னடைவை சந்தித்துள்ளது. ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதால் முதல்வர் அகிலேஷ் யாதவ் உற்சாகத்தில் இருக்கிறார்.

குஜராத் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த 9 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா கட்சி 6 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது.

அதேசமயம், மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக வெற்றி பெற்றிருப்பது பா.ஜனதாவுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. பாசிர்கத் தக்சின் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

அரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இடைத்தேர்தல் முடிவு காங்கிரசுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவுக்கு ஒரு பாடம்: சிவசேனா

sivasenaமும்பை, செப். 16- இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்திருப்பதால் இது அக்கட்சிக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று அதன் கூட்டணி கட்சியான சிவசேனா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தலின்போது மோடி அலை பரபரப்பாக பேசப்பட்டது. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா வென்றது. உத்தர பிரதேசத்திலும் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது. ஆனால், தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் தலைகீழாக அமைந்துவிட்டன.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “மத்தியில் மோடி அரசின் செயல்திறனை இந்த தேர்தல் பிரதிபலிக்கவில்லை. இந்த தேர்தல் பா.ஜனதாவுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். மோடி அலை தொடர்பான எங்கள் விமர்சனம் இந்த தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க உள்ள பா.ஜனதா-சிவசேனா கூட்டணியில் தொகுதிகள் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: