பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதிஉதவி வழங்க சத்தீஸ்கர் அரசு முடிவு

transgenderAஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய விரும்புபவர்களுக்கு அம்மாநில அரசு நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய சத்தீஷ்கர் மாநில அரசு முயன்று வருவதாகவும், ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாற நினைப்பவர்களின் பாலின மாற்று அறுவை சிகைச்சைகளுக்கு தேவையான நிதி உதவியை அளிக்க மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அம்மாநிலத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விரைவில் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை அம்மாநிலத்தின் சமூக நலத்துறை அமைச்சர் ராம்ஷீலா சாகு வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்களை தனி பாலினமாக அங்கீகரித்து, அவர்களுக்கு கல்வித் துறையிலும் வேலை வாய்ப்பு அளிப்பதிலும் சம உரிமைகள் வழங்க வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் இந்த ஆண்டின் முற்பகுதியில் தீர்ப்பளித்திருந்தது.

பாலின மாற்று அறுவை சிகிச்சை சற்று சிக்கலான ஒன்று என்றும், இந்த சிகிச்சைக்கு ரூபாய் ஐம்பதாயிரத்திலிருந்து, நான்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை தவறாக செய்யப்படுமேயானால் அது சிகிச்சை பெறுபவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பாலின மாற்று அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யும் திட்டத்தை தமிழக அரசு முன்பு அறிமுகப்படுத்தி, அந்தத் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனாலும், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆண் பாலினத்திலிருந்து பெண் பாலினத்திற்கு மாற விரும்பும் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை மட்டும்தான் செய்யப்படுவதாகவும், பெண்ணாக இருந்து ஆணாக மாறவிரும்பும் திருநம்பிகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதில்லை என்றும் மூன்றாம் பாலின செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான லிவிங் ஸ்மைல் வித்யா தெரிவிக்கிறார்.

அத்துடன் அரசு மருத்துவமனைகளில் சிறந்த தரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை என்றும், தமிழகத்தில் பெரும்பாலான திருநங்கைகள் தனியார் மருத்துவமனையிலேயே இத்தகைய அறுவை சிகிச்சைகளை செய்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். -BBC

TAGS: