இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் 40 படகுகள், வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக யாழ்.கடற்றொழில் வளத்துறை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
2004ம் ஆண்டுக்கு முன்னர் இந்திய மீனவர்களின் 64 படகுகள் யாழ்.நீரியல் வளத்துறையின் கீழ் இருந்தன.
அவற்றில் 24 படகுகள், அப்போது இருந்த யாழ்.மாவட்ட செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டன.
மிகுதி 40 படகுகளும் காரைநகர், ஊர்காவற்றுறை மற்றும் காங்கேசன்துறை ஆகிய கடற்கரைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.
நீண்ட காலம் கடல்நீரில் இருந்ததால் இந்த படகுகளின் மரங்கள் சிதைவடைந்தன. இதனையடுத்தே இந்த படகுகளின் இரும்புப் பகுதிகள் தற்போது விற்பனை செய்யப்பட்டன என்று அவர் கூறினார்.
விற்கப்பட்ட படகுகளில் 32 படகுகள், கடலிலிருந்து அகற்றப்பட்டுள்ளதுடன், மிகுதி 8 படகுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
படகுகள் அதேயிடத்தில் இருப்பதால் இயற்கை கடல்வளம் வளர்ச்சியடைவது தடுக்கப்படுவதாகவும் படகுகளை அகற்றுவதன் மூலம் அப்பகுதி சுத்தமடைந்து கடல்வளம் வளர்ச்சியடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புபட்ட செய்தி – யாழில் இரும்புக் கடைகளுக்காக விற்பனை செய்யப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்