அசாம், மேகாலயா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு

பேரிடர் மீட்புப் படையினர் கௌஹாத்தியில் வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை படகுகளில் சென்று மீட்டனர்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருப்பதால் அசாம், மேகாலயா மாநிலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மேட்டுப்பாங்கான இடங்களுக்குச் செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

திங்கட்கிழமையிலிருந்தே இந்த இரண்டு மாநிலங்களிலும் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பாலங்கள் சேதமடைந்திருப்பதோடு, சாலைகள், வீடுகள் ஆகியவையும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

மேகாலயா மாநிலத்தில் மட்டும் குறைந்தது பத்துப் பேர் இந்த மழை, வெள்ளத்தில் மரணமடைந்துள்ளனர்.

இம்மாத துவக்கத்தில் காஷ்மீரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 270க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

வெஸ்ட் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவாலும் வெள்ளத்தில் மக்கள் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாலும் திங்கட்கிழமையிலிருந்து 25 பேர் இறந்து போனதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நார்த் காரோ ஹில்ஸ் மாவட்டத்தில் குறைந்தது 100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், மீட்புப் பணிகளுக்காக அங்கு ராணுவம் அனுப்பப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் மேடான இடங்களில் இருக்கும் பள்ளிக்கூடங்களிலும் தேவாலயங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அசாமிலும் கடும் வெள்ளம்

அசாமில் கோவல்பரா மாவட்டத்தில் வெள்ள நீரில் சிக்கியிருந்த மக்களை மீட்புப் படையினரும் மத்திய படையினரும் மீட்டுள்ளனர்.

இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக மாநிலத் தலைநகரமான கௌஹாத்தியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதைச் சுற்றியிருக்கும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், கௌஹாத்தியில் ஓடும் பரலூ ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, வெள்ளம் கரையை உடைக்கலாம் என அஞ்சப்படுகிறது.

2012 ஜூலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அஸாமில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 50 லட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறினர். -BBC

TAGS: