இந்தியாவில் வர்த்தகம் செய்யும் சீனா குறித்து மக்கள் கவலை: எல்லை ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்துமா மத்திய அரசு?

ccc1ஆந்திர மாநில அரசால் விற்கப்பட உள்ள செம்மரக் கட்டைகளை வாங்குவதற்கு, சீனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல், வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக நோக்கத்துக்காக, குஜராத் மாநிலத்தைசேர்ந்த இளைஞர்களும், சீனமொழியை கற்க துவங்கியுள்ளனர். வர்த்தக விஷயங்களில், சீனர்களுக்கு இதுபோன்ற முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், சீன ராணுவ வீரர்கள், இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதை தடுக்கவும், அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லையே என்ற கவலை எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின், ஒரு சில மாவட்டங்களில் பரவலாக காணப்படும் செம்மரக் கட்டைகளுக்கு, சர்வதேச நாடுகளில் கடும் கிராக்கி உள்ளது. விஷேச குணமுடைய இந்த செம்மரக் கட்டைகள் மிகவும் உறுதியானவை என்பதால், அலங்கார பொருட்கள் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுகின்றன.ஆந்திர வனத்துறை கிடங்குகளில்…
கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள், ஆந்திர வனத்துறை கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள செம்மரக் கட்டைகள் தரத்தை இழப்பதால், அவற்றை சர்வதேச ஒப்பந்தப் புள்ளி மூலம் ஏலத்தில் விற்க, ஆந்திர அரசு முடிவு செய்தது.முதற்கட்டமாக, 8,500 டன் செம்மரக் கட்டைகள், தற்போது விற்பனை செய்யப்பட உள்ளன. அடுத்த மாதம் 8ல், இதற்கான டெண்டர் மற்றும் ஏலம் நடக்கவுள்ளது. இணையதளம் மூலம் நடக்கவுள்ள இந்த ஏலத்தில், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், தனி நபர்கள் பங்கேற்கவுள்ளனர்.செம்மரக் கட்டைகளுக்கு, சீனாவில் அதிக கிராக்கி உள்ளதால், அங்கு உள்ள வியாபாரிகளை அழைக்க, ஆந்திராவில் இருந்து, மூன்று பேர் அடங்கிய குழு, சீனா சென்றது. அங்கு, 100க்கும் மேற்பட்ட வியாபாரிகளை சந்தித்து, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஏலத்தில் அவர்களை கலந்து கொள்ள கோரியுள்ளது. அதற்கு,
வியாபாரிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதனால், அடுத்த மாதம் நடக்கவுள்ள ஏலத்தில், சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் பங்கேற்க முடிவு செய்துள்ளன.

குஜராத் இளைஞர்கள் ஆர்வம்:

சமீபத்தில், குஜராத்துக்கு வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அப்போது, குஜராத்தின் ஆமதாபாத் நகரத்தை, சீனாவின் குயாங்சூ நகரத்துக்கு இணையான வளர்ச்சியை ஏற்படுத்துவது, சீனா சார்பில், குஜராத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தொழில் பூங்கா அமைப்பது ஆகியவை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து, சீனமொழி தெரிந்தவர்களுக்கு, குஜராத்தில் வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கும் என, தகவல் வெளியானதால், குஜராத் இளைஞர்கள், சீனாவின் ‘மாண்டரின்’ மொழியை கற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஆமதாபாத், காந்திநகர் உள்ளிட்ட குஜராத்தின் முக்கிய நகரங்களில், சீன மொழியை கற்று கொடுக்கும் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

ஊடுருவல்:

வர்த்தக விஷயங்களில், சீனாவுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவுவதும், இந்திய பகுதிகளை ஆக்கிரமிப்பதும் தொடர்கதையாக உள்ளது. தற்போது கூட, ஜம்மு – காஷ்மீரின் லடாக் பகுதியில், 1,000 ராணுவ வீரர்கள் ஊடுருவி வெளியேற மறுத்து வருகின்றனர்.எனவே, சீன வீரர்களின் ஊடுருவலை தடுப்பதற்கு, மத்திய அரசு, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீனர்களால் பதற்றம்:

*கடந்த வாரம், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் லடாக் அருகே, சூமர் என்ற பகுதிக்குள், 1,000 சீன வீரர்கள் ஊடுருவினர்.
*சீன அதிபரின் வாக்குறுதியையும் மீறி, அந்த, 1,000 பேரும், தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர். வெளியேற மறுத்து, பிடிவாதம் பிடிக்கின்றனர்.
*இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ள சீன வீரர்கள், ஏழு கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளனர்.
*சீன – இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு இடையே, உடனடியாக பேச்சு நடப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை; இதனால், எல்லை பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
*ஜம்மு – காஷ்மீரில் மட்டுமல்லாமல், வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திலும், சீன வீரர்கள் அடிக்கடி ஆக்கிரமித்து, அந்த பகுதி தங்களுக்கு சொந்தமானது என, உரிமை கோருகின்றனர்.
*சீன வீரர்களின் ஊடுருவலை தடுக்க, மத்திய அரசு உறுதியான எந்த நடவடிக்கையையும் எடுக்காதது, ஆச்சர்யத்தைஏற்படுத்தியுள்ளது.
*செம்மரக் கட்டை விற்பனையை ஊக்குவிக்க, இந்தியாவிலிருந்து, சீனாவுக்கு அதிகாரிகள் குழு செல்கிறது. ஆனால், எல்லை பிரச்னை யை தீர்ப்பதற்கு, இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதது, கவலையை ஏற்படுத்தி உள்ளது.

TAGS: