மங்கள்யான்’ பயணம் வெற்றி: புதிய வரலாறு படைத்தது இந்தியா

 

  • செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதை  பெங்களூரில் உள்ள
  • செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதை  பெங்களூரில் உள்ள “இஸ்ரோ’ கட்டுப்பாட்டு அறையில் கொண்டாடும் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

 இந்தியாவின் “மங்கள்யான்’ விண்கலத்தை, செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் புதன்கிழமை காலை 7.42 மணியளவில் வெற்றிகரமாகச் செலுத்தி, இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைத்தனர். இந்த நடவடிக்கைக்குப் பிறகு, மங்கள்யான் விண்கலம் நல்ல நிலையில் செயல்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்திலிருந்து குறைந்தபட்சம் 421 கிலோமீட்டர் தொலைவும், அதிகபட்சம் 76,993 கிலோமீட்டர் தொலைவும் கொண்ட நீள்வட்டப் பாதையில் மங்கள்யான் சுற்றி வருகிறது.

இந்த விண்கலம், இந்தப் பாதையில் ஒரு முறை சுற்றிவர 72 மணி நேரம், 52 நிமிடங்கள், 51 விநாடிகள் ஆகும். வரும் வாரங்களில் இந்த விண்கலத்தில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 2013, நவம்பர் 5-ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் சுமார் 300 நாள்களுக்கும் மேலாகப் பயணித்து, செவ்வாய் கிரக சுற்றுப் பாதையை அடைந்தது.

பெங்களூரு பீன்யாவில் அமைந்துள்ள இஸ்ரோவின் விண்வெளி தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் புதன்கிழமை மங்கள்யான் வெற்றிப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, அந்த மாநில முதல்வர் சித்தராமையா, இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன், அந்த அமைப்பின் முன்னாள் தலைவர் யூ.ஆர்.ராவ், இஸ்ரோ நிறுவனர்களில் ஒருவரான யஷ்பால், முன்னாள் இயக்குநர் டி.கே.அலெக்ஸ், இஸ்ரோ தொலையுணர்வு, அறிவியல் செயற்கைக்கோள்கள் தலைமைத் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, மங்கள்யான் திட்ட இயக்குநர் சுப்பையா அருணன், கட்டுப்பாட்டு மைய துணை இயக்குநர் பிச்சைமணி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

வெற்றிப் பயணத்தின் கடைசி நிமிடம்: இந்திய நேரப்படி காலை 7.18 மணிக்கு மங்கள்யான் விண்கலத்தில் வைக்கப்பட்டிருந்த 440 நியூட்டன் திரவ உச்சநிலை மோட்டார் (440 சஉரபஞச கஐணமஐஈ அடஞஎஉஉ ஙஞபஞத- கஅங) இயக்கப்பட்டது. இந்த மோட்டார் 23 நிமிடங்கள், 8 விநாடிகள் இயங்கியது.

செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் செலுத்துவதற்காக மங்கள்யான் விண்கலத்தின் வேகம், நொடிக்கு 5.7 கிலோ மீட்டரில் இருந்து நொடிக்கு 4.6 கிலோ மீட்டராகக் குறைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஏற்கெனவே திட்டமிட்டப்படி பரபரப்பான இறுதிக் கட்ட முயற்சிகளின் விளைவாக, செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட தகவலை, பிரதமர் நரேந்திர மோடியிடம் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். இதனால், உற்சாகமடைந்த நரேந்திர மோடி, கே.ராதாகிருஷ்ணனின் முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டுத் தெரிவித்தார். “தடைகளைத் தகர்த்தெறிந்து, இலக்கை அடைந்திருக்கிறோம். செவ்வாய் கிரகத்தை அடைய மேற்கொண்ட 51-இல் 21 முயற்சிகள் மட்டுமே வெற்றி கண்டுள்ளன. இந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்தி காட்டியுள்ளது’ என பெருமிதத்துடன் மோடி தெரிவித்தார்.

முதல் முயற்சியிலேயே வெற்றி: மங்கள்யான் வெற்றியின் மூலம், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பிய அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவற்றின் வரிசையில், நான்காவது நாடாக இந்தியாவும் சேர்ந்துள்ளது.

மேலும், முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய ஒரே நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. மற்ற 3 நாடுகளும் பல முயற்சிகளில் ஏற்பட்ட தோல்விகளைக் கடந்தே, செவ்வாய் கிரகத்துக்கு அவற்றின் விண்கலத்தை அனுப்ப முடிந்தது.

இஸ்ரோ விஞ்ஞானிகளை கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆளுநர் வஜுபாய் வாலா, மத்திய அமைச்சர்கள் சதானந்த கெüடா, அனந்த்குமார் உள்ளிட்டோரும் பாராட்டினர்.

 

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் விண்கலத்தை முதல் முயற்சியிலேயே செலுத்தியுள்ள முதல் அமைப்பு இஸ்ரோதான். இந்தியாவின் விண்வெளி சார்ந்த திறனை வெளிச்சம் போட்டுக் காட்டிய இந்த வரலாற்றுச் சாதனைக்காக நாடே பெருமைப்படுகிறது.

– குடியரசுத் தலைவர்

 

முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் விண்கலத்தை செலுத்தியதன் மூலம் இந்திய விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைத்துள்ளனர். உலக அளவில் முதல் முயற்சியிலேயே விண்கலத்தை சுற்றுப்பாதையில் செலுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

– பிரதமர்

TAGS: