மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, 25 ஆண்டுகால பாஜக-சிவசேனை கூட்டணி வியாழக்கிழமை முறிந்தது.
அடுத்த மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு தொடர்பாக பாஜகவும் சிவசேனையும் ஒரு வாரத்தும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
“மொத்தமுள்ள 288 இடங்களில் இரு கட்சிகளும் தலா 135 இடங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். மீதமுள்ள 18 இடங்களை கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கலாம்’ என்று பாஜக யோசனை தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த சிவசேனை தன்னால் 150க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிட முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.
இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. தங்களுக்கான தொகுதிகளைக் குறைக்கக் கூடாது என்றும் தங்களுக்கு குறைந்தபட்சம் 18 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியக் குடியரசுக் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, சிவசேனையுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக மகாராஷ்டிர பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸ் வியாழக்கிழமை அறிவித்தார். இது தொடர்பாக அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிவசேனையின் விட்டுக் கொடுக்காத போக்குதான் கூட்டணி முறிவுக்குக் காரணம். இந்த முடிவை சிவசேனைக்குத் தெரிவித்து விட்டோம். கனத்த இதயத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுடன் நாங்கள் தேர்தலைச் சந்திப்போம் என்றார் தேவேந்திர ஃபட்னவிஸ்.
இதனிடையே, பாஜகவைச் சேர்ந்த மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான ஏக்நாத் காட்சே கூறுகையில், “”ஊழல் நிறைந்த காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே எங்கள் நோக்கம். எங்களின் பிரசாரத்தில் சிவசேனையை விமர்சிக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.
பலமுனைப் போட்டி: இதேபோல், 15 ஆண்டுகளாக நீடித்து வந்த காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிர களம் புதிய திருப்பத்தைக் கண்டுள்ளது. இதனால் மாநில தேர்தல் களத்தில் பலமுனைப் போட்டி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.