ஐ.நா.சபையில் சாத்தான் வேதம் ஓதியது : ராஜபட்ச உரை குறித்து வைகோ கருத்து

குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய ஒரு கொடிய கொலைகாரன், குற்றங்களை விசாரிக்க வேண்டிய நீதிபதி மீதே குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் அவமானக் கேடு ஐ.நா.சபையில் நேற்று  நிகழ்ந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் இனப்படுகொலை நடத்திய சிங்கள அதிபர் மகிந்த ராஜபட்ச பன்னாட்டு நீதிவிசாரணைக்கு ஆளாக வேண்டிய குற்றவாளி ஆவான்.

அத்தகைய கொடியவன் ஐ.நா. மன்றத்தின் பொதுச் சபையில், ஐ.நா. அமைப்பையே குற்றம் சாட்டியதும், இலங்கையில் சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணைக்கு தீர்மானித்த ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலின் மீது களங்கம் கற்பித்து, உலகத்தில் சில நாடுகள் தங்கள் சொந்தத் திட்டத்தை நிறைவேற்ற, மனித உரிமைகள் என்ற கருவியை பயன்படுத்துகிறார்கள் என்றும், ஐ.நா. அமைப்பில் பாரபட்சமான போக்கு நிலவுவதாகவும், அதனால் ஐ.நா.வின் நம்பகத்தன்மைக்கே  கேடு என்றும் சகட்டுமேனிக்கு குற்றம் சாட்டியுள்ளான். இதைவிட ஒரு அவமானம் ஐ.நா.அமைப்புக்கு இருக்க முடியாது.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டியே  தொடர்ந்து இந்தியா மேற்கொள்ளும் என்று உறுதி அளித்ததும் இன்னொரு காரணமாகும்.

ஐ.நா.அமைப்புக்கே அவமரியாதை செய்கின்ற கொலைகார ராஜபட்சவை இத்தனைக்குப் பின்னரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க முற்படுவது தமிழர்களின் காயப்பட்ட  நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கிற செயலாகும் என்று வைகோ கூறியுள்ளார்.

TAGS: