தென் ஆப்பிரிக்காவில் தில்லையாடி வள்ளியம்மைக்கு மரியாதை

valliammaiஜோகன்ஸ்பர்க், செப்.28- தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு ஒரு சட்டம், கறுப்பர்களான இந்தியர்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலை இருந்தது. குறிப்பாக, கையில் ‘பெர்மிட்’ இருந்தால்தான் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் எங்கும் சென்று வர முடியும் என்று பாரபட்சமான ஒருசட்டம் இருந்தது.

இதை எதிர்த்து அங்கு 1913-ம் ஆண்டு மகாத்மா காந்தி நடத்திய போராட்டத்தில், தனது 16 வயதிலேயே கலந்துகொண்டவர் தமிழ்ப்பெண்ணான தில்லையாடி வள்ளியம்மை.

இந்தப் போராட்டத்தில் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை அவர் அனுபவித்தபோது உடல் நலம் பாதித்து உயிரிழந்தார்.

அவர் அங்கு நிலவி வந்த நிறவெறி சட்டங்களை எதிர்த்து தனது 11 வயதிலேயே பெண்களையும், இளைஞர்களையும் திரட்டி போராட்டம் நடத்திய மன உறுதியை மகாத்மா காந்தி பாராட்டி எழுதி உள்ளார். அந்த தில்லையாடி வள்ளியம்மையின் நூற்றாண்டு நினைவுநாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி அங்கு ஜோகன்ஸ்பர்க் அருகே அமைக்கப்பட்டுள்ள வள்ளியம்மையின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவரது பெயரால் அங்குள்ள தமிழர் அமைப்பு, பெண்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS: