“ஸ்வச் பாரத்” என்று ஹிந்தியில் அழைக்கப்படும், “தூய்மையான இந்தியா”வை உருவாக்கும் நோக்கத்திற்கான பொதுச்சேவை திட்டப் பணிக்கான பிரச்சாரத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை புதுடில்லியில் துவக்கி வைத்தார்.
காந்தி பிறந்த தினமான இன்று, அவரது கனவு திட்டத்தை நிறைவேற்றும் ஒரு முயற்சியாக இந்த பிரச்சாரம் துவங்கப்படும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்திய சுதந்திர தினகொண்டாட்ட நிகழ்ச்சியின்போது உரையாற்றிய மோடி தெரிவித்திருந்தார். அதன்படி இந்த திட்டத்தை இந்திய தலைநகர் டில்லியில் துவக்கி வைக்கும் முகமாக நரேந்திர மோடி தூய்மை செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பின்னர் டில்லியின் மையத்தில் அமைந்துள்ள இந்தியா கேட் அருகில், ராஜ்பாத்தில் நடந்த கூட்டத்தில் பேசும்போது நாட்டை தூய்மைப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை அனைவரிடமிருந்தும் தாம் எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டார். தமது அரசின் இந்த முயற்சி அரசியல் லாபத்திற்காக தொடங்கப்பட்டது அல்ல என்றும் இந்த திட்டம் வெற்றி பெற்று, அதனால் சுத்தமான நாடு உருவாகும் பட்சத்தில் அதற்கான உரிமையை பாரதிய ஜனதா கட்சி கோராது என்றும் குறிப்பிட்டார். அதேசமயம், காந்திபிறந்த நாளில் அவரது நினைவை பின்னுக்குத்தள்ளும் அரசியல் நோக்கமும் இதன் பின்னணியில் இருப்பதாக பாஜகவின் எதிர்தரப்பாரால் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அரசு அலுவலகங்கள்; ரெயில்நிலையங்களிலும் திட்டம் துவக்கம்
இந்த புதிய பிரச்சார திட்டத்திற்காக அனைத்து மத்திய அரசு அலுவலகங்களில், எந்தவித பாகுபாடும் இல்லாமல் எல்லா தரப்பு ஊழியர்களும் அவரவர் அலுவலக வளாகங்களை தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரயில் நிலையங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் முழுவதையும் தூய்மை செய்யும் நோக்கத்திற்காகவும், சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தார்கள்.
இன்றைய சுத்திகரிப்பு பணியில் ஆம் ஆத்மி கட்சியினரும் இணைந்து கொண்டனர். அந்த கட்சியினர் இன்று டில்லியில் உள்ள பல முக்கிய பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டார்கள். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலும் இந்திய பிரதமரின் இல்லம் அமைந்திருக்கும் பகுதியில் தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டார்.
இந்த திட்டம் முதற்கட்டமாக டில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று துவங்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் இது விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தூய்மை குறித்து வலியுறுத்தும் பிரச்சார வீதி நாடகங்களை தேசிய நாடகப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் நடத்திக்காட்டினர்.
இந்தியாவில் இன்று துவக்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சியினால் கூட்டி பெருக்கித் தூய்மை செய்ய பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளதாகவும் வணிகர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக தென்னஞ்சீவு துடைப்பம், ஜப்பான் நாட்டு சிமோகா துடைப்பம் போன்ற பொருட்களுக்கு அதிக அளவில் கிராக்கி இருந்ததாக டில்லியை சேர்ந்த வியாபாரி ஒருவர் தெரிவித்தார். -BBC
ஒருநாள் கூத்து.