உசிலம்பட்டியில் ஜாதி மாறி காதலித்த பெண் மர்ம மரணம்

killingsதமிழகத்தில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தலித் இளைஞரைக் காதலித்த இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், காவல்துறைக்குத் தெரிவிக்கப்படாமல் அவரது உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூதிப்புரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விமலா என்ற பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்த திலீப் என்ற வாலிபரைக் காதலித்துள்ளார். இந்தக் காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால், விமலாவும் திலீப்குமாரும் கடந்த ஜூலை மாத இறுதியில் வீட்டை விட்டு வெளியேறினர். விமலா தேவியும் தானும் விருத்தாச்சலத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டதாக திலீப் கூறுகின்றார்.

ஊர் திரும்பிய விமலா தேவியை காவல்துறையினர் சமரசம் செய்து பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். இதற்குப் பின்னர் மீண்டும் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 2-ம் தேதியன்று இரவு அந்தப் பெண் தூக்கிலிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அதன்பின்னர், காவல்துறையினருக்குத் தெரியாமல் விமலாவின் சடலத்தை அவரது பெற்றோர் எரித்தனர். விமலாவின் சடலத்தோடு, அவரது உடமைகளும் எரிக்கப்பட்டன. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்தப் பெண்ணின் பெற்றோர் உட்பட 8 பேரைக் கைதுசெய்துள்ளனர்.

‘கௌரவக் கொலைகள்’

இந்தச் சம்பவம் குறித்து மதுரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்திர பிதரியிடம் கேட்டபோது, தடயவியல் ஆய்வுகளின்படி அந்தப் பெண் தற்கொலை செய்து இறந்துபோனதாகத் தெரியவருவதாகக் கூறினார்.

தற்கொலையாக இருக்கும்பட்சத்தில்,காவல்துறையினரிடம் தெரிவிக்காமல் அவரது சடலத்தை எரித்தது ஏன் என்று விமலாதேவியின் கணவரான திலீப்குமார் கேள்வி எழுப்புகிறார்.

ஆனால், உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் தற்கொலை செய்பவர்களின் சடலங்களை காவல்துறையினருக்கு அறிவிக்காமல் எரிக்கும் வழக்கம் உள்ளதாக காவல்துறை கூறுகின்றது.

ஆனால், உசிலம்பட்டி பகுதிகளில் சாதிப் பிரச்சனைகளால் ‘கௌரவக் கொலைகள்’ நடப்பது வழக்கமாக இருந்துவருவதாக மதுரை பகுதியில் செயல்பட்டுவரும் தலித் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

கொலையாக இல்லாதபட்சத்தில் சடலத்தை ரகசியமாக எரிக்க வேண்டிய அவசியம் என்ன என்று தலித் செயற்பாட்டாளரான ஸ்டாலின் ராஜாங்கம் கேள்வி எழுப்புகிறார்.

தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. -BBC

TAGS: