நீதியை நிலைநாட்டிய தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டை கையாள நினைக்கும் இராஜதந்திரம்!

modi_jaya_002தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் பரந்த அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

18 வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணிய சுவாமியால் சிறு பொறியாக பத்தவைக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குத்தான் இன்று பெருநெருப்பாக மாறி ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வையே சுட்டெரிக்கும் அளவுக்கு சென்றுள்ளது.

இந்தத் தீர்ப்பை யார் ஆதரிக்கிறார்கள், யார் யாரெல்லாம் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால், ஜெயலலிதாவை சார்ந்த அரசியல்வதிகளும், அவரது கட்சித் தொண்டர்களும், வாக்களித்த மக்களில் பெரும்பாலானவர்களும் அவருக்கு வளங்கிய தீர்ப்பை தவறெனக்கூறி போராட்டங்களை நடாத்தி வருவகிறார்கள்.

தமது தலைவி செய்தது குற்றமாக இருந்தாலும்கூட, பதினெட்டு வருடங்கள் கழிந்த நிலையில் அவற்றை மன்னித்து மறந்துவிடுவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் அவர்களது இன்றைய நிலைப்பாடாக இருக்கிறது.

அந்த அளவுக்கு அம்மாவின் தலைமைத்துவம் அவர்களை மயங்க வைத்திருக்கிறது. ஆனாலும், ஜெயலலிதாவின் தனிப்பட்ட அறிவு, திறமை,தலைமைத்துவ பண்பு, துணிவு, ஆழுமை, அரசியல் வன்மை என்பவற்றைத் தாண்டி அவர் செய்த முறைகேடான சொத்துக்குவிப்புக்கு எதிரான வழக்கில் நீதியின்பால் கிடைக்க வேண்டிய தண்டனை கிடைத்திருக்கிறது என்பதை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

தமிழ் நாட்டுக்கு உரிய, ஏற்றதொரு தலைவியாக ஜெயலலிதாவே இருக்க முடியும் என்பதை கடந்த சட்டசபை தேர்தலிலும், மத்திய அரசுத் தேர்தலிலும் தமிழக மக்கள் தங்களது தீர்ப்பாக வெளியிட்டிருந்தார்கள்.

நாடாளுமன்றத்தில் மக்களின் தீர்ப்பால் அவர் வெற்றி பெற்றிருந்தாலும், வழக்காடு மன்றத்தில் நீதியின் தீர்ப்பாக விதி அவருக்கு சதி செய்துவிட்டது.

கடந்த மத்திய தேர்தலில் “மோடி அலை” இந்தியா முழுவதும் வீசிய போதும், தமிழ் நாட்டில் ஜெயலலிதா அலை மட்டுமே வீசியது என்பதுதான் அவருக்கு ஆபத்தாக முடிந்ததோ! என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில் ஊழல் செய்யாத அரசியல்வாதிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. பல ஆண்டு காலமாக தமிழ் நாட்டில் தி.மு.க வும் அ.திமு.கவும் மட்டுமே மாறிமாறி பதவி வகித்ததால்,இரண்டு கட்சிகளுமே ஒன்று மாறி ஒன்று ஊழலை பங்குபோட்டுக் கொள்வது வளக்கமாக இருந்தது. ஏனைய கட்சிகளுக்கு ஆட்சிக்குரிய வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால் அவர்கள் ஊழலின் பிடியிலிருந்து தப்பியவர்களாக வலம் வருகிறார்கள்.

ஜெயலலிதா செய்த ஊழலுக்கான நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிட்டது. தி.மு.க வினருக்கான தீர்ப்பு எப்போ? என்பதுதான் அடுத்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஜெயலலிதாவின் சிறைத் தண்டனையை தி.மு.கவினர் அதிகம் கொண்டாடாதற்கு காரணம் அவர்களுக்கு எதிரான வழக்கில் எதுவும் நடக்கலாம் என்ற நிலை இருப்பதால்தான் என்று சொல்லப்படுகிறது. “அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன்!” என்ற நிலைக்கு தமிழ் நாட்டின் அரசியல்வாதிகளையே கொண்டுவந்துவிட்டது ஊழல்மேலான ஒரு நீதியின் தீர்ப்பு.

ஜெயலலிதாவின் மேலான ஊழல் வழக்கும், அதற்கான தீர்ப்பும் பரவலாக வரவேற்பை பெற்றிருக்கின்ற போதும், உச்சக்கட்ட தீர்ப்பு வளங்கப்பட்டது தொடர்பாக நெருடலான பல தகவல்களும் வந்த வண்ணமே உள்ளன.

இந்தியாவில் புதிய ஆட்சி பதவி ஏற்றபின், மத்திய அரசின் இராஜதந்திர செயல்பாட்டாளர்களின் ஒருமுகப்பட்ட திட்டமிடலின் சாயல் இந்த தீர்ப்பின் பின்னணியில் இருந்துள்ளதாக கருதப்படுகிறது.

கைது செய்யப்பட்டு உடனடியாகவே சிறையில் அடைக்கப்பட்டது, ஜாமீன் உடனடியாக எடுக்க முடியாதபடி தீர்ப்பின் தினத்தை திட்டமிட்டது, ஆட்சியில் செல்வாக்கை செலுத்தும் உரிமையை தடுக்கும் வகையிலான சிறைத் தண்டனை, மற்றும் தேர்தலில் பங்குகொள்ள முடியாதபடி நீண்டகாலத்தடை, உச்சமான தண்டப் பணம், போன்ற அதி உயர் தீர்ப்பின் பின்னணியில், துணிச்சல் மிக்க ஒரு உறுதியானதலைமையை தமிழ் நாட்டிலிருந்து அகற்றும் மத்திய அதிகாரிகளின் இராஜதந்திரம் வெற்றியளித்திருக்கிறது என்றே கருதவேண்டி உள்ளது.

தீர்ப்பு வளங்கப்பட்டபின் இடம்பெறும் ஒவ்வொரு சம்பவமும் அதையே சொல்கிறது. ஜெயலலிதாவின் அதிரடியானதும், உறுதியானதுமான கடும் போக்கு மத்திய அரசுக்கு சவாலாக அமைந்ததே இந்த நிலைக்கு காரணமாகவும் இருக்கலாம்.

கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே ஊழல் பெருச்சாளிகள் என்;றாலும், கருணாநிதியைப்போல், மத்திய அரசிடம் வேண்டியதை பெற்றுக்கொண்டு வாலாட்டக் கூடியவரல்ல ஜெயலலிதா என்பது இந்திய மத்திய அரசில் உள்ளவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது.

அதனால்தான் அவருக்கு கடிவாளம் போட வடக்கு முடிவு செய்ததாக கருதவும் இடமுண்டு.

இலங்கை அரசைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு வளங்கப்பட்ட தீர்ப்பு மகிழ்ச்சியானதே. அவரது அண்மைக்கால வெளிப்பாடுகள் இலங்கை அரசுக்கு நெருக்கடிகாகவே இருந்துள்ளன.

“இந்திய மத்திய அரசோடுதான் எங்களுக்கான தொடர்பு” என்று இலங்கை அரசு சொல்லிக் கொண்டாலும்கூட, ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் தொடர்பான நடவடிக்கைகளை இலங்கை அரசு ஏதோ ஒரு வகையில் விமர்சிக்க வேண்டியவர்களாகவே இருந்துள்ளார்கள்.

ஜெயலலிதாவின் சிறை வாசம் என்பது ஈழத் தமிழ் மக்களின் கரிசனையை பொறுத்தவரை தவிர்க்க முடியாத ஒன்றாகவே கருதப்படுகிறது. தமிழ்நாடு என்பது ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் என்றுமே பிரிக்க முடியாத ஒரு அங்கம். அங்கு ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளும், அரசியல் மாற்றங்களும் ஈழத்திலும் எதிரெலிக்கும் என்பது வரலாறு.

ராஜீவின் மரணத்தின் பின் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பாக ஜெயலலிதாவின் வெளிப்பாடுகள் காலத்துக்குக் காலம் மாறுபட்டவையாகவே இருந்துள்ளன. “விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை எதிர்கிறேன்!

ஈழத் தமிழ் மக்களின் விடுதலையை ஆதரிக்கிறேன்!”என்பது போன்றே ஜெயலலிதாவின் அண்மைக்கால நடவடிக்கைகள் இருந்துள்ளன. அதனால் அவருக்கு எதிராக வளங்கப்பட்ட தீர்ப்புக்குறித்து ஈழத் தமிழ் மக்கள் மகிழ்ச்சி கொள்வதோ, கவலை கொள்வதோ என்பதைத் தாண்டி,தமிழ் நாட்டில் ஒரு உறுதியான, நிலையான அரசு வேண்டும் என்பது ஈழத் தமிழ் மக்களுக்கு என்றுமே ஆதரவுத் தளமாக அமையும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அங்கு அமையக்கூடிய உறுதியான அரசுக்கு வாக்களிக்கும் மக்களே எங்களுக்காகவும் குரல்கொடுக்கக் கூடியவர்கள். அவர்களின் வாக்குப் பலத்தால் அவர்களுக்கு கிடைத்த அரசியல் தலைமையைநாம் புறந்தள்ளிவிட முடியாது.

அதுவே தாயக மக்களுக்கான தெரிவாகவும் இருக்கிறது. அனாலும், “தமிழ் நாட்டு அரசியல் இனி என்னாகுமோ?” என்பதே இன்றைய எமது கரிசனையாகவும் இருக்கிறது.

க. ரவீந்திரநாதன்
[email protected]

TAGS: