எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்: இந்தியா பதிலடி

  • ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் எல்லையில் ரோந்துப் பணியில் ராணுவ வீரர்கள்.
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் எல்லையில் ரோந்துப் பணியில் ராணுவ வீரர்கள்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியையொட்டி அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இந்த மாதத்தில், பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்துவது, இது 10ஆவது முறையாகும்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியையொட்டி அமைந்துள்ள ராணுவ நிலைகள் மற்றும் இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியையொட்டி அமைந்துள்ள இந்தியக் கிராமங்கள் மீது கடந்த 1 ஆம் தேதி பாகிஸ்தான் படையினர் இரு முறை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல்களில் 6 பேர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

கடந்த 2ஆம் தேதியும் இந்தியக் கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் சிறிய ரக துப்பாக்கிகளால் சுட்டதுடன், எறிகுண்டுகளையும் வீசினர். இதில் 4 பேர் காயமடைந்தனர்.

கடந்த 3ஆம் தேதி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி மற்றும் சர்வதேச எல்லையையொட்டிய பகுதியில் அமைந்துள்ள இந்தியக் கிராமங்கள், ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் 4 முறை அத்துமீறித் தாக்குதல் நடத்தினர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குல்மார்க் பகுதி, ஜம்மு பிராந்தியத்தில் ஜம்மு, பூஞ்ச் ஆகிய பகுதிகளில் இந்தத் தாக்குதலை அவர்கள் நடத்தினர். இதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதேபோல, கடந்த 4ஆம் தேதியும், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி நெடுகிலும் பாகிஸ்தான் படையினர் எறிகுண்டுகளை வீசித் தாக்குதல் மேற்கொண்டனர். இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்ததையடுத்து, பாகிஸ்தான் படையினர் தங்களது தாக்குதலை நிறுத்திக் கொண்டனர்.

10-ஆவது சம்பவம்:

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டம் பல்னொயில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியையொட்டிய இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் ஞாயிற்றுக்கிழமையும் தாக்குதல் நடத்தினர். காலை 8 மணியளவில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது.

இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்தத் தாக்குதலில் இந்திய தரப்பில் யாரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை.

கடந்த 1ஆம் தேதி முதல் இதுவரை பாகிஸ்தான் படையினர் 10 முறை இந்திய நிலைகள் மீதும் கிராமங்கள் மீதும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பூஞ்ச் பகுதியில் மட்டும் 7 அத்துமீறல்களும், ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் 3 அத்துமீறல்களும் நடைபெற்றுள்ளன.

பாஜக கடும் கண்டனம்

எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு பாஜக ஞாயிற்றுக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.

இதுதொடர்பாக அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது:

பாகிஸ்தானின் தொடர் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்கு எத்தகைய பதில் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதைப் பாதுகாப்பு படையினர் எடுத்துக் கொள்ளலாம்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா முன்னேறி வருகிறது. இதனைக் கண்டும், உள்நாட்டுப் பிரச்னைகளாலும் பாகிஸ்தான் விரக்தியடைந்துள்ளது’ என்றார் அவர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் பொறுமையைச் சோதிப்பதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் எச்சரிக்கை விடுத்திருப்பது பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “சொந்த நாட்டிலேயே முஷாரஃபுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆகையால், அவருக்கு நாமும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை’ என்றார்.

TAGS: