பாகிஸ்தானின் எல்லை மீறிய தாக்குதல்களை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக இந்திய நிதி மற்றும் பாதுக்காப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி சர்வதேச எல்லைகளில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஏற்புடையதல்ல என்று அருண் ஜெட்லி கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தை சமாளிக்க இந்திய ராணுவம் அனைத்துவித ஏற்பாடுகளுக்கும் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில தினங்களாக டில்லி ஏயம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி இன்று திங்கட்கிழமை வீடு திரும்பியுள்ளார். அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
முன்னதாக இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் வெளியிட்டிருந்தார்.
இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான சர்வதேச எல்லையில் நடத்தப்படும் தாக்குதல்களில், பெண்கள் உள்பட 5 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சுமார் 29 பேர் காயமுற்றதாகவும் இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே தொடரும் இத்தகைய செயல்களை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவில் அரசியல் சூழல் மாறியுள்ளதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.
துப்பாக்கி மற்றும் குண்டுகளை பயன்படுத்தி நடத்தப்படும் தாக்குதல்களால், எல்லைப்பகுதிகளில் வாழும் அப்பாவி பொதுமக்கள் இன்னலுக்கு உள்ளாகி வருவதாகவும் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார். இந்த பகுதிகளில் நிலவும் சூழலை மத்திய அரசு கண்காணித்து வருவதாகவும், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு நிர்வாகம் அப்பகுதிகளில் தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர் தாக்குதல்களை நடத்திவருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் கண்டனம் வெளியிட்டுள்ளார்கள்.
இதேவேளை இன்று காலை இந்திய எல்லைக்குள் ஊடுறுவ முயன்ற மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெவிக்கின்றன. கொல்லப்பட்ட அந்த மூன்று நபர்களின் சடலங்களுக்கு அருகிலிருந்து இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அதிநவீன கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. -BBC
மகாராஷ்டிரத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் சிவசேனையை எதிர்கொள்ள பாஜக–வின் தேர்தல் தந்திரமாககூட இருக்கலாம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஆட்சி செய்யும் எந்த அரசாக இருந்தாலும், “இந்தியா-பாகிஸ்தான் எல்லை மீறிய தாக்குதல்”
இரு நாடுகளுக்கும், தங்களுடைய ஆட்சியை காப்பாற்றி கொள்ள உதவும் முக்கியமான துருப்பு சீட்டல்லவா !!