அருண் ஜேட்லியுடன் முப்படைத் தலைமைத் தளபதிகள் முக்கிய ஆலோசனை

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்திவரும் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியை இந்திய முப்படைத் தலைமைத் தளபதிகள் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் இந்த மாதம் 1ஆம் தேதி முதல் இதுவரை 11 முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களைத் தவிர்க்கும் பொருட்டு, இந்திய- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்திய எல்லைப் பகுதிக்குள் தாக்குதலை மேற்கொண்டால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்ட எச்சரிக்கைக்கும் பலன் இல்லை.

இதைத் தொடர்ந்து, தில்லியில் அமைச்சர் அருண் ஜேட்லியை செவ்வாய்க்கிழமை சந்தித்த இந்திய முப்படைத் தலைமைத் தளபதிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதியில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து அமைச்சரிடம் அவர்கள் எடுத்துரைத்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

TAGS: