பாகிஸ்தான் அத்துமீறலுக்கு விரைவில் தீர்வு: மோடி உறுதி

பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு விரைவில் சுமுகத் தீர்வு காணப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை உறுதி தெரிவித்தார். அதேசமயம், பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தினால், மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்கப்படும் என்றும், பாகிஸ்தான் தனது அத்துமீறலை நிறுத்தும்வரை பதிலடி நடவடிக்கை தொடரும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், இந்திய விமானப்படையின் 82ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படை தலைமைத் தளபதி அரூப் ராஹா தில்லியில் புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றார். அப்போது அவரிடம், பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், “அனைத்தும் விரைவில் சரியாகிவிடும்’ என்றார். ஆனால், விரிவான தகவல் எதையும் அவர் வெளியிடவில்லை.

அதேசமயம், இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

பாகிஸ்தானின் நிர்பந்தத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு கடுமையான பதிலடியை இந்தியா கொடுக்கும். அமைதி பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் உண்மையில் ஆர்வம் காட்டினால், இந்தியாவும் தயாராக உள்ளது. ஆனால், ஐ.நா. உள்பட 3ஆவது அமைப்பின் தலையீட்டை இந்தியா ஏற்காது.

இந்தியாவின் பதிலடியில், பாகிஸ்தான் தரப்பில் 35 பேர் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அது உறுதிபடுத்தப்படவில்லை. ஆகையால், பாகிஸ்தான் தனது தாக்குதலை முதலில் நிறுத்த வேண்டும். எல்லையில் இந்தியா அத்துமீறவில்லை. தனது இறையாண்மையைப் பாதுகாக்கும் நடவடிக்கையிலேயே இந்தியா ஈடுபட்டுள்ளது. எனவே, பதிலடி கொடுப்பதை இந்தியா நிறுத்தாது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் ஆகியோர் சந்தித்து, ஜம்மு-காஷ்மீர் எல்லை நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர்.

பாகிஸ்தான் துணைத் தூதரை அழைத்து கண்டனம்: தில்லியில் உள்ள இந்தியாவுக்கான பாகிஸ்தானின் துணைத் தூதர் மன்சூர் அகமது கானை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, அப்பாவி மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

தொடரும் அத்துமீறல்கள்: ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில், பாகிஸ்தான் படையினர் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமப் பகுதிகள் மீதும் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசுவதுடன், இயந்திரத் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றாலும் அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஜம்மு, பூஞ்ச் பகுதிகளில் கடந்த 3ஆம் தேதி பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 6 பேர் காயமடைந்தனர். இதேபோல, ஜம்முவின் ஆர்னியா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை பாகிஸ்தான் படையினர் சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் பலியாகினர். மேலும் 34 பேர் பலத்த காயமடைந்தனர். அந்தப் பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் பலத்த சேதமடைந்தன.

பூஞ்ச், மெந்தரில் அத்துமீறல் முடிவுக்கு வந்தது: பூஞ்ச், மெந்தர் பகுதியில் பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு, இந்திய ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனையடுத்து, அந்தப் பகுதியில் நடத்தி வந்த தாக்குதலை பாகிஸ்தான் படையினர் நிறுத்தி விட்டனர்.

எனினும், சர்வதேச எல்லையையொட்டிய ஆர்.எஸ். புரா, ஆர்னியா, கனாசக், பர்க்வால் ஆகிய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக சம்பா, ஹிராநகரில் உள்ள அனைத்து ராணுவ நிலைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு அங்குள்ள இந்திய ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

TAGS: