மத்திய அரசு உடனே தலையிட வேண்டும்! திமுக வலியுறுத்தல்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் (இடமிருந்து) கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன், தலைவர் மு.கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

  • சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் (இடமிருந்து) கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன், தலைவர் மு.கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

 

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து இருப்பதாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

திமுக தலைவர் கருணாநிதி கூட்டத்துக்குத் தலைமை வகித்தார்.

காலை 10.20 மணிக்குத் தொடங்கி சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, எப்படிப்பட்ட வன்முறைச் செயல்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பதைத் தமிழகம் கனத்த இதயத்தோடு கண்டு வருகிறது.

திமுகவை வம்புக்கு இழுப்பு: தீர்ப்பை வழங்கிய நீதிபதி குன்ஹாவையும், கருணாநிதியையும் பற்றி கடுமையான வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டுவது, உருவப் பொம்மைகளைக் கொளுத்துவது என்று திமுகவை வம்புக்கு இழுக்கும் வகையில் அதிமுகவினர் அநாகரிமாக நடந்துகொள்கின்றனர்.

அதிமுகவினரின் இப்படிப்பட்ட நடவடிக்கைகளைத் தடுக்க முடியாத கையறு நிலையில் காவல் துறையினர் இருப்பதுடன், ஆளும்கட்சியினரின் செயல்களுக்கு துணை போகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். தமிழகத்தில் அரசமைப்புச் சட்ட இயந்திரம் என்பது முற்றிலும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. இன்னும் சில நாள்களுக்கு இந்த நிலை தொடர அனுமதிக்கப் பட்டால், பொது அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு சட்டம், ஒழுங்கு பிரச்னை மீட்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமாகி விடும்.

அதிமுகவினரின் இந்த வன்முறைச் செயல்களை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கடுமையாகக் கண்டிப்பதோடு, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன் வரவேண்டும்.

உள்ளூர் பிரச்னைக்கு முக்கியத்துவம்: அதிமுக ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அவர்கள் கூறியபடி தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாகவோ, மின் வெட்டே இல்லாத மாநிலமாகவோ, விலைவாசியைக் குறைக்கவோ செய்யவில்லை. அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிலவரங்களைப் பொருத்து, உள்ளூர் பிரச்னைகளுக்காக ஆங்காங்கு ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் போன்ற அறப் போராட்டங்களை ஜனநாயக வழிமுறைகளின்படி நடத்த வேண்டும் என்று 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, எஸ்.பி.சற்குணபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி உள்பட திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 “சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்’

வரும் 2016-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி உத்தரவிட்டார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, ஜெயலலிதா சிறையில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பின் விவரங்களைத் தமிழில் மொழிபெயர்த்து திமுக தலைமை தரும். அதைத் துண்டறிக்கையாக மக்களிடம் அளித்து, நீங்கள் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

தேர்தலுக்குத் தயாராகுங்கள்: உள்கட்சித் தேர்தல் பணியைத் தீவிரப்படுத்துங்கள். அக்டோபர் மாதத்துடன் கட்சியின் கிளைக் கழகத் தேர்தலை முடிக்க வேண்டும்.

நவம்பர் மாதத்தில் மாவட்டச் செயலாளர் தேர்தலை முடிக்க வேண்டும்.

உள்கட்சித் தேர்தலுக்காக திமுகவினர் தகராறுகளில் ஈடுபடக்கூடாது.

மாவட்டச் செயலாளர்கள் யார் என்பதை திமுக தலைமை சுட்டிக் காட்டும். அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். டிசம்பர் மாதத்தில் திமுகவின் பொதுக்குழு நடைபெற உள்ளது.

அதற்குள் உள்கட்சித் தேர்தலை முடிக்க வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தேர்தலைச் சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

டிசம்பர் மாதத்தில் பொதுக்குழுவை முடித்துவிட்டு, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்றார் கருணாநிதி.

TAGS: