ரூ.6 லட்சம் கோடி அன்னிய முதலீடு காத்திருக்கிறது: மோடி

  • மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வியாழக்கிழமை சர்வதேசமுதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹான். உடன், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், தொழிலதிபர்கள்.
  • மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வியாழக்கிழமை சர்வதேசமுதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹான். உடன், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், தொழிலதிபர்கள்.

“”இந்தியாவில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வதற்கு அன்னிய நிறுவனங்கள் காத்திருக்கின்றன. இந்த முதலீடுகளைப் பெறுவதற்கு ஆர்வத்துடன் முந்திக் கொள்ளும் மாநிலங்கள் கணிசமான பங்கைத் தட்டிச் செல்லலாம்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹான், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சைரஸ் மிஸ்திரி, சஷி ரூயா, குமாரமங்கலம் பிர்லா, ஆடி கோத்ரெஜ், கிஷோர் பியானி, ஒய்.சி.தேவேஸ்வர், அஜய் ஸ்ரீராம், 28 நாடுகளின் தூதர்கள் உள்பட நாட்டின் முன்னணித் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

மாநாட்டைத் தொடங்கிவைத்து மோடி பேசியதாவது:

ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்கள் சுமார் ரூ.6,00,000 கோடி அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதற்குத் தயாராக உள்ளன. அருமையான இந்த வாய்ப்பை ஆர்வத்துடன் முந்திக் கொண்டு பெற்றுச் செல்லும் மாநிலங்களுக்குக் கணிசமான முதலீடுகள் கிடைக்கும்.

முதலீட்டாளர்களுக்கு யோசனை: “இந்தியாவில் உற்பத்தி’ திட்டம் மாபெரும் பலனைத் தரக் கூடிய ஒன்றாகும். இந்தத் திட்டத்தின்கீழ், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவை தங்களது தயாரிப்புகளுக்கான சந்தையாகப் பார்க்காமல், உலகின் உற்பத்தி மையமாக்க முயல வேண்டும். இதன்மூலம், இந்திய மக்களின் வாங்கும் திறனை பன்மடங்காகப் பெருக்க வேண்டும். இந்தியா வளமையாக மாறாவிட்டால், அதன் வாங்கும் திறன் அதிகரிக்காது. அந்தத் திறன் அதிகரிக்காவிட்டால், இந்தியாவை மிகப் பெரிய சந்தையாக உருப்பெறச் செய்யும் எண்ணம் தொலைதூரக் கனவாக ஆகி விடும்.

வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை: வேளாண்மை, உற்பத்தி, சேவை ஆகிய துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதே மத்திய அரசின் நோக்கமாகும். அரசு- தனியார் கூட்டு திட்டங்களில் அதிக அளவில் முதலீடுகளை செய்வதற்கு வர்த்தக நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

மத்திய பிரதேசம் முதலிடம்: மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்வதில் மத்தியப் பிரதேச மாநில அரசு முந்திக் கொண்டுள்ளது. நாட்டிலேயே முதல் மாநிலமாக, பாதுகாப்புத் துறைக்குத் தேவையான பொருள்களை தயாரிக்கும் 2 தொழிற்சாலைகளை ஜபல்பூர், குவாலியர் ஆகிய நகரங்களில் மத்தியப் பிரதேசம் அமைக்க உள்ளது.

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை நனவாக்கும்வகையில் 2 மின்னணு தொழிற்பேட்டைகள் இந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மக்கள் நிதி திட்டத்தின்கீழ், சுமார் 36 லட்சம் பேர் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.

மாநில அரசுகளுக்கு அழைப்பு: ஒட்டுமொத்த மாநிலங்களும் முன்னேறினால்தான் இந்த தேசம் முன்னேறும். எனவே, அரசியல், கொள்கை முரண்பாடுகளைக் களைந்துவிட்டு மத்திய அரசோடு மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். மாநில அரசுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என்றார் மோடி.

TAGS: