தாக்குதல் நீடித்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: அருண் ஜேட்லி

“எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளை அந்நாட்டால் தாங்கிக் கொள்ள முடியாது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி எச்சரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர், வியாழக்கிழமை கூறியதாவது: இந்தியாவின் கடுமையான எச்சரிக்கை பாகிஸ்தானைச் சென்றடைந்துவிட்டது. எல்லைப் பகுதியில் அமைதி நிலவ வேண்டுமெனில், உடனடியாக அவர்கள் தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால், அந்நாட்டிற்கு தாங்கிக் கொள்ள முடியாத விளைவுகளை இந்திய ராணுவம் ஏற்படுத்தும்.

பாகிஸ்தானின் தாக்குதலுக்கான காரணத்தை ஊகிக்க விரும்பவில்லை. எனினும், அவர்களின் ஊடுருவலால் எல்லைப் பகுதியில் பதற்றம் நீடிக்காமல் இருப்பதற்கு ஒரே வாய்ப்பு, தக்க பதிலடி கொடுப்பதுதான். அதை, நமது இந்திய ராணுவம் வரவேற்கத்தக்க அளவில் செய்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான், சீன ராணுவங்களின் அத்துமீறல் விவகாரங்களை சிலர் (ராகுல் காந்தி, சரத் பவார்) விமர்சித்து வருகிறார்கள்.

இதுபோன்ற சமயங்களில், நமது எல்லையைப் பாதுகாக்க நமது ராணுவ வீர்ர்கள் எந்த அளவுக்குப் பாடுபடுகிறார்கள் என்பதையாவது அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பிறகு, இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பலர், நமது ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதன்மூலம், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றார் அருண் ஜேட்லி.

TAGS: