கடந்த ஒன்பது நாட்களாக இந்தியாவின் காஷ்மீர் எல்லைப் பகுதியில் தொடர்ந்தும் இந்தியப் படையினருக்கும் பாகிஸ்தானிய படையினருக்கும் இடையே நடைபெற்றுவந்த கடுமையான துப்பாக்கிச் சண்டை தற்போது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் உள்ள இந்தியாவின் கதுவா மாவட்டத்தில் மட்டும் 4 எல்லைக் காவல் நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் தாக்குல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மூ மற்றும் சம்பா மாவட்டங்களின் அருகே எந்தவொரு துப்பாக்கிச் சண்டையும் இடம்பெறவில்லை.
‘சர்வதேச எல்லையில் அமைந்துள்ள ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் அக்டோபர் 9 மற்றும் 10ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் துப்பாக்கிச் சூடு எதுவும் நடக்கவில்லை’ என்று எல்லைப் பாதுகாப்புப் படையதிகாரி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், சர்வதேச எல்லையில் அமைந்துள்ள கதுவா மாவட்டத்தில் உள்ள நான்கு எல்லைக் காவல் நிலைகள் மீது சுமார் 20 நிமிடங்களுக்கு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும் ஆனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
9- நாள் மோதலில் 8 இந்தியர்கள், 11 பாகிஸ்தானியர்கள் பலி
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கடந்த 9 நாட்களாக நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 8 இந்தியர்களும் 11 பாகிஸ்தானியர்களும் கொல்லப்பட்டனர்.
இந்திய தரப்பில் 13 பாதுகாப்புதுறை அதிகாரிகள் உட்பட 90 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் முதலாம் தேதி முதல் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் டஜன் கணக்கான மோதல் தவிர்ப்பு ஒப்பந்த மீறல்கள் நடந்துள்ளன.
2003-ம் ஆண்டில் இருநாடுகளும் கைச்சாத்திட்ட மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையை மீறுகின்ற மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாக இந்த மோதல்கள் கருதப்பட்டன.
கோபமூட்டும் செயல்கள் எதிலும் தாம் ஈடுபடாத போதிலும், மற்ற தரப்பிலிருந்தே துப்பாக்கிப் பிரயோகம் தொடங்கப்பட்டதாக இரண்டு தரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன.
காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் கவனத்தைப் பெற முடியாமல் தோல்வியடைந்த விரக்தியினாலேயே, பாகிஸ்தான்-இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக ஜம்மூ காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா விமர்சித்திருந்தார்.
இது தொடர்பில் பேசிய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, இனிமேலும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துமானால், அது தாங்கிக்கொள்ள முடியாத விலைகொடுக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தார். -BBC