பாகிஸ்தான் போர்நிறுத்த மீறலை அரசியலாக்குவதா?: ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானின் போர்நிறுத்த மீறல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கியது, நமது வீரர்களின் மன உறுதியைக் குறைத்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

ஹரியாணா மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த மாநிலத்தின் தாத்ரி, பிவானி பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ராஜ்நாத் சிங் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: எல்லையில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்தத் தாக்குதல்களை அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களது செயல்கள் இந்திய ராணுவத்தின் மன உறுதியைக் குறைத்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் இந்த செயல்பாடுகளை நாடு எப்போதும் மன்னிக்காது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, நமது ராணுவ வீரர் ஒருவரின் தலையை பாகிஸ்தான் வீரர்கள் துண்டித்தனர். ஆனால் அப்போது பாகிஸ்தான் படையினரின் செயலை காங்கிரஸ் கட்சியினர் கண்டிக்கவில்லை.

இந்திய ராணுவத்தில் தைரியத்துடன் ஹரியாணாவைச் சேர்ந்த பல வீரர்கள் பணியாற்றி வருவது பெருமை அளிக்கிறது. இந்த மாநிலத்தை விரைவான வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டு செல்ல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை தோற்கடித்து பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங்பேசினார்.

TAGS: