நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் “முன்மாதிரி கிராமம்’ திட்டம்: பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்

  • “முன்மாதிரி கிராமம்’ திட்ட வழிகாட்டுதல்களை, தில்லியில் சனிக்கிழமை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. உடன், (இடமிருந்து) பிரதமரின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா. மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் உபேந்திரா குஷ்வாஹா,

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் “முன்மாதிரி கிராமம்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடக்கி வைத்தார். இதையொட்டி, தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் “அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் தலா 3 கிராமங்களைத் தத்தெடுத்து, 2019-ஆம் ஆண்டுக்குள் அந்தக் கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்; இதில் முதற்கட்டமாக, தலா ஒரு கிராமத்தை 2016-க்குள் மேம்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

இத்திட்டத்தையொட்டி, தன்னை மக்களவைக்குத் தேர்வு செய்த வாராணசி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி தில்லி செங்கோட்டையில் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் “சன்சாத் ஆதர்ஷ் கிராம யோஜ்னா’ (நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மாதிரி கிராமம் திட்டம்) என்ற புதிய திட்டம் லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் பிறந்த நாளான அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதன்படி, தில்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்மாதிரி கிராமம் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். இதையடுத்து, திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு அவர் பேசியதாவது:

“நம் நாட்டில் நல்ல அரசியலுக்கான கதவுகளைத் திறக்க “முன்மாதிரி கிராமம் திட்டம்’ வகை செய்யும். மக்களின் தேவை, சமூக ஈர்ப்பு, பங்களிப்பு ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்டதாக இத்திட்டம் திகழும். வளம் நிறைந்த நம் நாட்டில் ஜனநாயகமும், அரசியலும் பிரிக்க முடியாதவை. ஆனால், தவறான அரசியலால் ஜனநாயகத்துக்கு தற்போது அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே, நல்ல அரசியலை நோக்கிப் பயணிக்கும் இத்திட்டத்தின் முகவர்களாகவும், உந்து சக்தியாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளங்குவர்.

அரசின் திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்துகிறோம். அவை சிறப்பாக அமல்படுத்தப்படும் கிராமங்களை வைத்துத்தான் அந்த மாநிலத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேரும். கிராமங்கள் தன்னிறைவு பெற மறைந்த தலைவர் நானாஜி தேஷ்முக் பல்வேறு சிந்தனைகளைக் கொண்டிருந்தார். அவரது பிறந்த நாளில், இத்திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பனர்கள் தலைமையில் செயல்படுத்த உறுதி ஏற்போம்.

நிறுத்த முடியாத திட்டம்: எனவே, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் 2016-க்குள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து மேம்படுத்த வேண்டும். 2019-இல் மேலும் இரண்டு கிராமங்ளைத் தத்தெடுத்து மேம்படுத்த வேண்டும். நம் நாட்டில், மக்களவை, மாநிலங்களவை இரண்டையும் சேர்த்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 800 பேர் உள்ளனர். இவர்களின் ஆதரவுடன் 2019-க்குள் அடிப்படை வசதிகள் கொண்ட சுமார் 2,500 கிராமங்களை நம்மால் உருவாக்க முடியும். மாநில அளவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவர்களது தொகுதியில் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்தால் நாடு முழுவதும் சுமார் 7,000 கிராமங்களை நம்மால் மேம்படுத்த முடியும். காலப்போக்கில் முன்மாதிரி கிராமம் திட்டம், மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இத்திட்டத்தை யாராலும் கிடப்பில் போட முடியாது.

அரசின் பல்வேறு திட்டங்கள், சில காரணங்களால் தேக்கமடைவதை நாம் காண்கிறோம். ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே உண்டு. அதனால், பிரச்னை எதுவானாலும் அதை எனது கவனத்துக்கு உடனே உறுப்பினர்கள் கொண்டு வரலாம். மகாத்மா காந்தி சத்யாகிரக இயக்கத்தை, கிராமத்தில் இருந்துதான் தொடங்கினார். அதுபோல நாமும் நமது தேச வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கிராமத்தில் இருந்து உருவாக்குவோம்’ என்றார் நரேந்திர மோடி.

தமிழக பிரதிநிதிகள் பங்கேற்பு: மத்திய அரசின் அழைப்பின்பேரில் தமிழகத்தில் இருந்து மாநில, மாவட்ட, பஞ்சாயத்து கிராம நிர்வாகப் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களின் விவரம்: தமிழக கிராமப்புற வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் கே. ராஜாமணி, திட்ட அதிகாரிகள் அருள்ஜோதி அரசன் (காஞ்சிபுரம்), கே. வரதராஜன் (தஞ்சாவூர்), எச். விஜயகுமார் (திருநெல்வேலி), பிடிஓக்கள் பழனி பிரபு (தொண்டாமுத்தூர், கோவை), எஸ். சேகர் (திண்டுக்கல்), ரிச்சர்ட் வில்சன் (கன்னியாகுமரி), முந்தைய காலங்களில் கிராம தூய்மைக்காக விருது பெற்ற பஞ்சாயத்துத் தலைவர்கள் கே. கனகராஜ் (கோவை), வி. இந்திரா (பாப்பரம்பாக்கம், திருவள்ளூர்), எஸ். பத்மினி (கோணமலை, ஈரோடு), ராஜ செல்வி (கருத்தனேந்தல், ராமநாதபுரம்), பி.ஆர். ஜெகநாதன் (பொங்கலூர், திருப்பூர்), கே. கருப்பையா (என். பஞ்சம்பட்டி, திண்டுக்கல்), கே. தேவராஜ் (கொடநாடு, நீலகிரி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

18 அம்ச வழிகாட்டுதல்கள்

“முன்மாதிரி கிராமம்’ திட்டம் தொடர்பான 18 அம்ச வழிகாட்டுதல்களை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை வெளியிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட நிர்வாகம், கிராமப் பஞ்சாயத்து ஆகியவை இணைந்து கடைப்பிடிக்க வேண்டிய இந்த வழிகாட்டுதல்களின் விவரம் வருமாறு:

1. காந்தியின் “சுயராஜ்ஜிய’க் கொள்கையைக் கடைப்பிடித்தல்.

2. மிக ஏழை, நலிவடைந்தோருக்கு பயன் கிடைத்தல்.

3. கிராமத்தைத் தேர்வு செய்ய ஒரு மாத கால அவகாசம்.

4. சமவெளியில் 3,000-5,000, மலை, பழங்குடியினர் பகுதியில் 1000-3000 என மக்கள் தொகை உள்ள கிராமத்தைத் தேர்வு செய்தல்.

5. பஞ்சாயத்து, மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து திட்ட அறிக்கை தயாரித்தல்.

6. நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி, செலவினம் தொடர்பாக மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறைச் செயலர் தலைமையிலான தேசியக் குழுவுடன் ஆலோசனை நடத்துதல்.

7. மக்கள் பங்களிப்புடன் வெளிப்படையாகச் செயல்படுதல்.

8. கிராமப் பஞ்சாயத்துகள், மக்கள் ஆதரவுடன் அமலாக்கம்.

9. உள்ளூர், சமூக, கலாசாரங்களுக்கு மதிப்பளித்தல்.

10. தன்னார்வ, ஆராய்ச்சி நிறுவனங்களின் பங்களிப்பைப் பெறுதல்.

11. சுகாதாரம், சமூக, மனித வளம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், அடிப்படை வசதிகள், சமூகப் பாதுகாப்பு, நல்லாளுகைத் திட்டங்களை வகுத்தல்.

12. சாலை, குடிநீர், சுகாதார அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க உத்தி வகுத்தல்.

13. நவீன தொலைதொடர்பு, தொழில்நுட்ப வசதிகள், வேளாண் தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்குதல்.

14. தனியார், தன்னார்வ அமைப்புகள், கூட்டுறவுத் துறைகளின் ஒத்துழைப்பைப் பெறுதல்.

15. திட்ட செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்தல்.

16. திட்டத்தின் நன்மை பற்றி பிரசாரம் செய்தல்.

17. திட்ட அமலாக்கத்துக்குப் பிந்தைய தேவைகளை ஆராய்தல்.

18. திட்ட முடிவில் மதிப்பீட்டு அறிக்கை தயாரித்தல்.

நிபந்தனை என்ன?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் செயல்படுத்தப்படும் முன்மாதிரி கிராமம் திட்டத்தில் உறுப்பினர்களின் சொந்த இடமோ, அவரது மனைவி வீட்டார் இடமோ இருக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி நிபந்தனை விதித்தார். அதேசமயம், அனைத்து உறுப்பினர்களும் தங்களுக்கு விருப்பமான ஒரு கிராமத்தை தனது தொகுதியில் இருந்து தேர்வு செய்ய சுதந்திரம் உள்ளது என்றார் அவர்.

TAGS: