வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருந்துகள்: மத்திய அரசு பரிசீலனை

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருந்துகளை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த அவரிடம், “புதிய குடும்ப அட்டைகளை, அரசின் மற்ற சலுகைகளையும் பெறுவதற்கான அடையாள அட்டையாகப் பயன்படுத்தச் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்துமா?’ என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:

இது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குடும்ப அட்டைகளின் மூலம் இலவச மருந்துகள், அரசு சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை போன்ற இதர சலுகைகளையும் பெறுவதை உறுதிப்படுத்துவது குறித்து யோசித்து வருகிறோம். ஏழைகள், குறிப்பாக புதிய உணவுச் சட்டம் அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் வாழும் வசதியற்றவர்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர்.

நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. இத்திட்டத்தின்கீழ், ஏழை மக்களைச் சென்றடைய வேண்டிய ஆதாயம் அவர்களைச் சென்றடையவில்லை. இத்திட்டம் தொடர்பாக பல்வேறு புகார்கள் உள்ளன.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் லட்சியத் திட்டமான உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை கிடப்பில் போடமாட்டோம். இத்திட்டத்தை சிறப்பான முறையில் அமல்படுத்த உத்தேசித்துள்ளோம்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெறக் கூடிய ஏழைகளை அடையாளம் காண்பதற்குப் பதிலாக, இத்திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டியவர்களை (வசதியானவர்கள்) அடையாளம் காண்பது நல்லது என்று கருதுகிறேன் என்றார் பாஸ்வான்.

பொது விநியோகத் திட்டத்திலிருந்து வசதியானவர்கள் நீக்கம்?

பாஸ்வான் மேலும் கூறியது: “”பொது விநியோகத் திட்டத்தில் இருந்து வருமான வரி செலுத்துவோரையும், அரசு அதிகாரிகளையும் விலக்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. இதை அமல்படுத்த முயற்சிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மாநிலங்களுடன் நான் விவாதிக்க உள்ளேன்.

இது போன்றதொரு திட்டத்தை மத்தியப்பிரதேச அரசு ஏற்கெனவே அமல்படுத்தி வருகிறது. அங்கு முதல் இரண்டு நிலை அதிகாரிகளும், வருமான வரி செலுத்துவோரும் பொது விநியோகத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

TAGS: