மகளிர் ஆணையத்துக்கு கைது அதிகாரத்தை வழங்க முடியாது: மத்திய சட்ட அமைச்சகம்

மகளிருக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் அதிகாரத்தை தேசிய மகளிர் ஆணையத்துக்கு வழங்க மத்திய சட்ட அமைச்சகம் மறுத்து விட்டது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் விவகாரத்தில், மனித உரிமைகள் அமைப்புக்கு நிகரான அதிகாரம் கொண்ட அமைப்பாக தேசிய மகளிர் ஆணையத்தை மாற்றும் வகையில், சட்ட அமைச்சகத்துக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் சில பரிந்துரைகளை அளித்திருந்தது. அதில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரையும், மகளிர் ஆணையத்தின் சம்மன்களை நிராகரிப்போரையும் கைது செய்யும் அதிகாரம், அபராதம் விதிக்கும் அதிகாரம் ஆகியவற்றை தேசிய மகளிர் ஆணையத்துக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர், ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் தனித்தனியாக 2 குழுவினரால் தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்திருந்தது.

இந்த பரிந்துரைகளை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்க மறுத்து விட்டது. கைது செய்வது, அபராதம் விதிப்பது ஆகியவை காவல்துறை மற்றும் நீதித்துறையின் பணிகள் என்றும், அந்த அதிகாரங்களை தேசிய மகளிர் ஆணையத்துக்கு வழங்க முடியாது என்றும் சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசிய மகளிர் ஆணையத் தலைவர், ஆணைய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு ஒரு குழுவே போதுமானது என்றும், அதுதொடர்பான பரிந்துரையையும் ஏற்க முடியாது என்றும் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகளிர் நலன், அவர்களை பாதுகாக்கும் அமைப்பாக தேசிய மகளிர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்புக்கு, 1990ஆம் ஆண்டு மகளிருக்கான தேசிய ஆணைய சட்டத்தின் 3ஆவது பிரிவின்படி, மகளிருக்கு எதிரான பல்வேறு சம்பவங்கள் குறித்து விசாரிக்கவும், விசாரணை நடத்தவும், பரிந்துரைகள் வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

TAGS: