மேல்சாதிக்காரருடைய வயலில் ஆட்டை மேயவிட்ட தலித் சிறுவன் “எரித்துக் கொலை”

இந்தியாவின் வட மாநிலமான பிஹாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகமான மஹாதலித் சமூகத்தை சேர்ந்த சாய் ராம் என்ற ஒரு 15 வயது சிறுவன் மீது, மேல் சாதி நபர் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

dalit_india
பிஹாரில் சாதி வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்துவருகின்றன

 

தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை உறுதி செய்துள்ள ரோதாஸ் மாவட்ட உயர் காவல் துறை அதிகாரி சந்தன் குஷ்வஹா, சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குல்குல் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காவல்துறை புகாரின்படி புதனன்று பிற்பகல் மோகன்புர் கிராமத்தில் அந்த சிறுவனின் ஆட்டு மந்தை மேய்ந்து கொண்டிருந்த வேளையில், சிறிது நேரம் அந்த இடத்தை விட்டு அகன்றிருந்தார்.

அந்த சமயத்தில் அவருடைய மந்தையில் உள்ள ஒரு ஆடு தவறுதலாக அருகிலிருந்த வயலில் சென்று மேயத் துவங்கியுள்ளது.

வயலுக்கு சொந்தக்காரரான, அக்கிராமத்தின் ராஜபுத்திர என்ற மேல்சாதியை சேர்ந்த குல்குல் சிங் என்பவர், ஆத்திரமடைந்து அந்த சிறுவனை விரட்டி ஜாதியைச் சொல்லி அவதூறான வார்த்தைகளால் திட்டி, வயலுக்கு அருகே வைத்து அடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது சிறுவனின் வீட்டிற்கு சென்று அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி குல்குல் சிங் தீவைத்துள்ளார்.

தீவைக்கப்பட்ட சிறுவனை பெற்றோர் மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில காவல்துறையினருக்கு பிஹார் முதலமைச்சர் ஜித்தன் ராம் மஞ்சி உத்தரவிட்டுள்ளார். -BBC

TAGS: