சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன்: தண்டனை நிறுத்தி வைப்பு

Jayalalithaaபுதுடெல்லி, அக். 17–சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 21 நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் ஜெயலலிதாவை கர்நாடகா ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்ய மறுத்து விட்டது.

இதையடுத்து ஜெயலலிதா தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார். அந்த மனுவில் அவர், தனக்கு 66 வயதாகி விட்டது என்பதாலும் உடல் நலக்குறைவால் அவதிப்படுவதாலும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் இன்று மதியம் 12.40 மணிக்கு 65–வது மனுவாக ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் லோகூர், சிக்ரி ஆகிய 3 பேரை கொண்ட அமர்வு பெஞ்ச் முன்னிலையில் ஜெயலலிதா மனு மீதான விசாரணை நடந்தது. ஜெயலலிதா தரப்பில் பிரபல வக்கீல் பாலி நாரிமன் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:–

எனது கட்சிக்காரருக்கு 66 வயதாகிறது. அவர் மூத்த குடிமகன் ஆவார். மேலும் அவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை உள்ளன. இதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். சிறப்புக் கோர்ட்டில் தண்டனை வழங்கப்பட்ட பிறகு கர்நாடகா ஐகோர்ட்டில் ஜெயலலிதா தன் மீதான தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 4 ஆண்டுகள் தண்டனையை அவர் நிறுத்தி வைக்கத்தான் கூறினார்.

தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை. ஆனால் கர்நாடகா ஐகோர்ட்டு இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வில்லை. எனது கட்சிக்காரர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதையும் கர்நாடகா ஐகோர்ட்டு கவனத்தில் கொள்ளவில்லை. எனவே ஜெயலலிதாவின் வயது, உடல் நிலை மற்றும் அவருக்கு சமுதாயத்தில் உள்ள பொறுப்பு ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு கவனத்தில் எடுத்துக் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்.

இவ்வாறு வக்கீல் பாலி நாரிமன் கூறினார்.

இதையடுத்து அவரிடம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சில கேள்விகளை கேட்டனர். ‘‘நாங்கள் இந்த வழக்கின் தண்டனையை நிறுத்தி வைத்தால், மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை எப்போது முடிப்பீர்கள்?’’ என்று நீதிபதிகள் கேட்டனர். அப்போது ஒரு நீதிபதி, ‘‘இந்த வழக்கின் தண்டனையை உடனே நிறுத்தி வைப்போம் என்று நினைக்காதீர்கள்’’ என்றார். பிறகு அவர், ‘‘இதை நாங்கள் கேள்வியாகத்தான் கேட்கிறோம்’’ என்று விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி தத்து முன்னிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பில் வக்கீல் சுசீல்குமார் ஆஜராகி வாதாடினார். அவரும் சசிகலா உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் தீர்ப்பு விவரத்தை வெளியிட்டனர்.

தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 3 மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை எந்த விதத்திலும் தாமதப்படுத்தக் கூடாது. இந்த விசாரணைக்கு தேவையான எல்லா ஆவணங்களையும், தகவல்களையும் கர்நாடகா ஐகோர்ட்டுக்கு ஜெயலலிதா 2 மாதங்களில் கொடுக்க வேண்டும்.

அதாவது டிசம்பர் மாதம் 18–ந்தேதிக்குள் கோப்புகள் அனைத்தையும் சரி பார்த்து கொடுத்து விட வேண்டும். இதில் ஒரு நாள் தவறினாலும் சுப்ரீம் கோர்ட்டு பொறுத்துக் கொள்ளாது. மேல் முறையீட்டு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட வேண்டும். அந்த நம்பிக்கையில் 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வக்கீல் பாலி நாரிமன் எழுந்து, ‘‘கர்நாடகா ஐகோர்ட்டில் நடைபெறும் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்’’ என்றார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘‘ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு செல்லும் பட்சத்தில் எத்தகைய தாக்கம் ஏற்படும்?’’ என்று கேள்வி விடுத்தனர். அதற்கு பாலி நாரிமன், ‘‘சுப்ரீம் கோர்ட்டு விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்க தயார்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் சில உத்தரவுகளை பிறப்பித்தனர். அதன் விவரம் வருமாறு:–

தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கு சீர்குலையவும் ஏற்படக்கூடாது. அதற்கு ஏற்ப தன் கட்சிக்காரர்களுக்கு ஜெயலலிதா உத்தரவிட வேண்டும். ஒரு வேளை ஜெயலலிதா உத்தரவின் பேரில் அவர் கட்சிக்காரர்கள் சட்டம்– ஒழுங்கை பாதிக்கும் வகையில் செயல்பட்டால், சுப்ரீம் கோர்ட்டு, அதை தீவிர கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

TAGS: