10 ஆண்டுகளில் நதிகள் இணைப்பு சாத்தியம்: மத்திய அமைச்சர் உமா பாரதி

தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தை அடுத்த ஏழு முதல் பத்து ஆண்டுகளில் நிறைவேற்றுவது சாத்தியமாகும் என்று நீர் வளம், நதிநீர் வளர்ச்சி மற்றும் கங்கை நதி தூய்மைப்படுத்துதல் துறையின் மத்திய அமைச்சர் உமா பாரதி நம்பிக்கை தெரிவித்தார்.

நதிகள் இணைப்புக்காக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் உறுப்பினர்-செயலராக தேசிய நீர் வள முகமையின் தலைமை இயக்குநர் எஸ். மசூத் ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் முதலாவது கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அமைச்சர்கள், செயலர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்குத் தலைமை வகித்து மத்திய அமைச்சர் உமா பாரதி பேசியதாவது:

நதிகள் இணைப்புத் திட்டம் தேசிய ஜனநாயகக் கூட்டணியன் கனவுத் திட்டமாகும். நதிகளை இணைக்கும் முயற்சிக்கு மத்திய அரசுக்கு மாநிலங்கள் முழு ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு நேரிடாத வகையில் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தும் என உறுதியளிக்கிறேன்.

திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற எந்த மாநிலத்தையும், அமைப்புகளையும், தனிநபர்களையும் சந்தித்து உதவி கேட்கத் தயாராக உள்ளேன். மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் உத்தேசித்துள்ள 30 நதிகள் இணைப்புத் திட்டங்களும் 7 முதல் 10 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நதிகள் இணைப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில் நீர்வள அமைச்சகம் மூலம் அடுத்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தில்லியில் “ஜல் மந்தன்’ எனும் தலைப்பில் மூன்று நாள் மாநாடு நடைபெற உள்ளது. அதில், நதிகள் இணைப்பு தொடர்பான விவாதம் ஒரு நாள் இடம்பெறும்’ என்றார் அமைச்சர் உமா பாரதி.

இக்கூட்டத்தில் பங்கேற்ற தெலங்கானா மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஹரீஷ் ராவ், “இமயமலையில் இருந்து உற்பத்தியாகி வரும் நதிகளுடன் தீபகற்ப நதிகள் இணைப்பை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்’ என்றார்.

தமிழகம், பிகார், தெலங்கானா, அசாம், கேரளம், ராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம், ஆந்திரம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களின் அமைச்சர்கள், நீர்வளத் துறை மூத்த அதிகாரிகள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழகம்- கேரளம் முரண்பாடு

நதிகள் இணைப்புத் திட்ட அமலாக்கம் தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம், கேரள அரசுகள் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டன.

இக்கூட்டத்தில் தமிழக பொதுப் பணித் துறையின் முதன்மைச் செயலர் டாக்டர் எம். சாய்குமார் பேசுகையில், “தண்ணீர் பற்றாக்குறை நிலவும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் இருக்கும் நீராதாரத்தை முடிந்த வரை அதிகபட்ச அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. பருவமழை மாற்றங்களால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் விநியோகத்தில் பற்றாக்குறையும் நிலவுகிறது. ஆகவேதான், மகாநதி – குண்டாறு, பம்பை – அச்சன்கோயில் – வைப்பாறு ஆகிய தீபகற்ப நதிகளை இணைக்குமாறு தமிழக அரசை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நதிகளை இணைப்பதால் தமிழகம் தண்ணீர் பிரச்னையில் இருந்து மீளும். எனவே, இந்த தீபகற்ப நதிகள் இணைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்றார்.

கேரள மாநில நீர்வளத் துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் பேசுகையில், “பம்பை-அச்சன்கோயில் – வைப்பாறு நதிகள் இணைப்பு தொடர்பாக 1995-இல் தேசிய நீர் வள முகமை (என்டபிள்யூடிஏ) வெளியிட்ட சாத்தியக்கூறு அறிக்கையில் இத்திட்டத்திற்கு கேரள அரசு தெரிவித்த ஆட்சேபங்கள், கருத்துகள் பரிசீலிக்கப்படவில்லை. கேரளத்தின் பம்பை, அச்சன்கோயில் நதிகளின் உபரி நீரை தமிழகத்தில் உள்ள வைப்பாறுக்கு திருப்பிவிட முடியும் என மத்திய ஆய்வு அமைப்பின் மதிப்பீடு தவறானது. எனவே, பம்பை – அச்சன்கோயில் – வைப்பாறு நதிகள் இணைப்பு விவகாரத்தில் தமிழக அரசு அல்லது தேசிய நீர் வள முகமை ஆகியவற்றுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ள கேரள அரசு விரும்பவில்லை’ என்றார்.

TAGS: