கருப்புப் பணம்: அனைத்து தகவல்களையும் வெளியிட முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

வெளிநாடுகளில் இருந்து கருப்புப் பணம் தொடர்பாக பெறப்படும் அனைத்துத் தகவல்களையும் பகிரங்கமாக வெளியிட முடியாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து முன்னிலையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி வெள்ளிக்கிழமை ஆஜராகி, ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

வெளிநாடுகளில் இருந்து கருப்புப் பணம் தொடர்பாக பெறப்படும் அனைத்துத் தகவல்களையும் வெளியிட முடியாது. ஏனெனில், அதுபோல் தகவல்களை வெளிப்படுத்துவது உடன்பாட்டை மீறிய செயல் என்று வெளிநாடுகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

சில நாடுகளுடன் நாம் செய்து கொண்டுள்ள இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ்தான் அவை இத்தகவல்களை அளித்துள்ளன. இப்போது அத்தகவல்களை நாம் பகிரங்கமாக வெளிப்படுத்தினால், இனி எந்தவொரு நாடும் மேற்கண்ட ஒப்பந்தத்தை நம்முடன் செய்து கொள்ளாது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவைச் சமர்ப்பித்த முகுல் ரோத்தகி, இதன் மீது அவசர விசாரணை நடத்துமாறு தலைமை நீதிபதியைக் கேட்டுக் கொண்டார்.

அப்போது, மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி, மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

இந்த மனு மீது விசாரணை நடத்தக் கூடாது. இது போன்றதொரு மனுவை குற்றவாளிகள்தான் சமர்ப்பித்திருக்க வேண்டுமே தவிர, அரசு அல்ல.

வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ளவர்களைக் காப்பாற்றவே அரசு முயற்சிக்கிறது என்று ராம் ஜேத்மலானி தெரிவித்தார்.

“வெளிநாட்டு வங்கியில் கணக்குத் தொடங்குவது குற்றமல்ல’: உச்ச நீதிமன்ற விசாரணைக்குப் பின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் அனைத்தும் கருப்புப் பணம் என்று கூற முடியாது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்குத் தொடங்குவது குற்றமல்ல.

எந்தெந்தக் கணக்குகள் மீது விசாரணை தொடங்குவது என்று அரசு முடிவு செய்கிறதோ, அவை தொடர்பான தகவல்கள் மட்டுமே பகிரங்கமாக வெளியிடப்படும்.

வரி குறைவாக விதிக்கப்படும் நாடான லீக்டென்ஸ்டீனில் இந்தியர்கள் செய்துள்ள அனைத்து வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களையும் சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்திருந்த உத்தரவை மாற்றியமைக்குமாறு மத்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது என்றார் ரோத்தகி.

ஏற்கெனவே, கருப்புப் பணம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வெளியிட முடியாது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கண்டனம்

இவ்விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி குறைகூறியுள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா கூறியதாவது:

கருப்புப் பண விவகாரத்தின் மையமான தகவல்களைப் பெறும் நோக்கம், மத்திய அரசிடம் இல்லை. கருப்புப் பண மீட்புக்கு முக்கியத்துவம் தந்தது காங்கிரஸ் அரசுதான்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சில சம்பவங்களை கவனித்துப் பார்த்தால், வெளிநாடுகளில் கருப்புப்பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிடச் செய்ய அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கணிசமான நேரத்தையும் வளங்களையும் செலவிட்டது தெரிய வரும் என்றார் சஞ்சய் ஜா.

TAGS: