மறைமுக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்: முப்படைகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

  • முப்படைத் தளபதிகளின் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் கைகுலுக்கும் தளபதிகள். உடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி.
  • முப்படைத் தளபதிகளின் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் கைகுலுக்கும் தளபதிகள். உடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி.

 மறைமுக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முப்படைகளும் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

தில்லியில் முப்படைத் தளபதிகளின் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, முப்படைத் தளபதிகளையும் அவர் முதல் முறையாக அப்போது கூட்டாகச் சந்தித்தார். மாநாட்டில் மோடி பேசியதாவது:

இந்தியா தனது பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டுவதற்கு அமைதி, பாதுகாப்புடன் கூடிய சூழல் அவசியம். சாதகமான வெளியுறவுச் சூழலை உருவாக்குவதிலும், இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் எனது அரசு கவனம் செலுத்தி வருகிறது.

நமக்கு பரிச்சயமான, வழக்கமான சவால்களோடு, மாறி வரும் உலகையும் சந்திக்க இந்தியா தயாராக வேண்டும். இதற்கு, பொருளாதாரக் கொள்கைகளிலும், பாதுகாப்புக் கொள்கைகளிலும் நமக்குப் புதிய சிந்தனை தேவைப்படுகிறது. முழு அளவிலான போர்கள் நடப்பது அரிதாகி இருக்கலாம். ஆனால், முப்படையானது (எதிரிகளை) தடுக்கும் கருவியாகத் தொடர்ந்து நீடிக்கும். அது மற்றவர்களின் அணுகுமுறை மீது தாக்கத்தைக் கொண்டிருக்கும். மாறி வரும் உலகில், கணிக்கவே முடியாத மறைமுக எதிரியையும், மறைமுகச் சவால்களையும் சந்திக்க முப்படைகளும் தயாராக இருக்க வேண்டும். பாதுகாப்புச் சவால்களை கணிக்க இயலாததொரு எதிர்காலத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம். சூழ்நிலைகள் அடிக்கடி மாறலாம்.

இணையவெளி மீதான ஆதிக்கமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடும். நிலம், வான், கடல் போலவே விண்வெளி மீதான கட்டுப்பாடும் முக்கியமானதாக மாறும்.

இந்தியப் பாதுகாப்புப் படைகளை சீரமைக்க வேண்டியது அவசியம். படையினரின் முழுமையான ஆயத்த நிலையை உறுதிப்படுத்துவதற்காக போதுமான வளங்களை வழங்கவும், குறைபாடுகளைக் களையவும், நவீனமயத்துக்கான தேவைகளைச் சந்திக்கவும் உறுதிபூண்டுள்ளேன்.

உலகம் தற்போது இந்தியாவை ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் கவனிக்கிறது. உலகப் பொருளாதாரத்தின் தூண்களில் ஒன்றாக மட்டுமன்றி, பிராந்திய, உலகப் பாதுகாப்புக்கான நங்கூரமாகவும் இந்தியா மாறும் என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படைகள் தங்கள் கொள்முதல் நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். மேலும், உள்நாட்டிலேயே பாதுகாப்புச் சாதனங்களை வடிவமைப்பதிலும், தயாரிப்பதிலும் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முப்படைகளும் வளங்களைப் பயன்படுத்துவதில் சிக்கனம், திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் மோடி.

உலகளாவிய புதிர் பாகிஸ்தான்-ஜேட்லி

முப்படைத் தளபதிகளின் மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது: சிக்கல் நிறைந்த அண்டை நாடுகளுடன் இந்தியா வாழ்ந்து வருகிறது. பாகிஸ்தான், ஓர் உலகளாவிய புதிராக இருக்கிறது. பாகிஸ்தானின் சமீபத்திய போர்நிறுத்த மீறல்களுக்கு நமது ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் சிறப்பான முறையில் பதிலடி கொடுத்தன. பாகிஸ்தானில் இருந்து 20 ஆண்டுகளாக எல்லை தாண்டிய தீவிரவாதம் உருவாகி வருகிறது. இதை முப்படைகளும் திறம்பட முறியடித்து வருகின்றன. சில சர்ச்சைகள் காரணமாக மந்தகதியை எட்டிய பாதுகாப்புச் சாதன கொள்முதல் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும். பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சிலின் கூட்டம், குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒரு முறை நடத்தப்படும் என்று அருண் ஜேட்லி பேசினார்.

TAGS: