மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுதது பா.ஜ.க. ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் இருமாநில புதிய முதல்வர்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில் என்று தெரிவித்துள்ள பாஜக, மாநில முதல்வர்கள் நியமனம் குறித்து ஆராய பார்வையாளர்கள் இருவரை அனுப்ப முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ராஜ்நாத் சிங், ஜெ.பி.நாடா ஆகியோர் செல்கின்றனர். அரியானா மாநிலத்திற்கு வெங்கையா நாயுடு, தினேஷ் ஆகியோர் செல்ல இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கான முதல்வர் பெயர்கள் இன்று அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் எங்களுக்கு வாக்களித்தவர்களை அவமதித்தது போலாகும்: பாஜக
மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் முடிவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல், மகாராஷ்டிர மக்கள் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலத்தை அளிக்க வில்லை. இதனால் யாராலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. இந்த நேரத்தில் மகாராஷ்டிர மக்களின் நலனை கருத்திற்கொண்டு ஆட்சி அமைக்கும் திறன் கொண்ட கட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.
பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனவே அந்தக் கட்சி ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரசின் இந்த அழைப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளதாவது: “காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசின் ஊழலை விமர்சித்துத்தான் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தோம்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதுபோன்றதொரு கூட்டணியை அமைத்தால், எங்களுக்கு வாக்களித்தவர்களை அவமதித்தது போலாகும். யாருடன் கூட்டணி என்பது தொடர்பான இறுதி முடிவை கட்சி முடிவு செய்யும். தேர்தலில் பிரச்சாரத்தின்போது சிவசேனாவை விமர்சித்து நாங்கள் பேசவில்லை. அக்கட்சியை விமர்சிக்க மாட்டோம் என்பதை தனது பிரச்சாரத்தின்போது நரேந்திர மோடி தெரிவித்திருந்தார் என்றார்.