கருப்புப் பண விவரங்களை வெளியிட்டால் காங்கிரஸூக்கே பாதிப்பு: அருண் ஜேட்லி

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டால் காங்கிரஸ் கட்சிக்குதான் தர்மசங்கடம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

இதுகுறித்து ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

வெளிநாடுகளில் கருப்புப் பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சிக்குதான் அது தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் கருப்புப் பணம் வைத்துள்ள நபர்களில் குறிப்பிட்ட சிலரது பெயரையே மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவதில் மத்திய அரசு தோற்றுவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

ஊடகங்கள் வெளியிட்ட தவறான தகவல்களாலேயே அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். கடந்த 1995-ஆம் ஆண்டு ஜெர்மனியுடன் அப்போதைய காங்கிரஸ் அரசு செய்துகொண்ட இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின்படியே கருப்புப் பணப் பெயர்ப் பட்டியலை மத்திய அரசால் பகிரங்கமாக வெளியிட முடியவில்லை.

அதேநேரத்தில், அந்தப் பட்டியலை ஊடகங்களில் பகிரங்கமாக வெளியிட முடியாதே தவிர, நீதிமன்றத்தில் பதிவு செய்வதில் எந்தத் தடையும் கிடையாது.

எனவே, வழக்கின் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஏற்றவாறு சிறிது சிறிதாக அப்பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை நீதிமன்றத்தில் அரசு வழங்கும் என்றார் அருண் ஜேட்லி.

TAGS: