விலங்குகளைத் துன்புறுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கால்நடை துயர்துடைப்புக் கழகம் தெரிவித்துள்ளது.
இதற்காக அந்த கழகத்தைச் சேர்ந்தவர்கள் தீபாவளி தினத்தில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இது குறித்து சென்னை கால்நடை துயர்துடைப்புக் கழகத்தின் செயலாளர் தியாகராஜன் கூறியது:-
தீபாவளி தினக் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது பட்டாசுகள். ஆனால் அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளால் தெரு மற்றும் வீட்டு விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. இதைத் தவிர கழுதை, நாய், பூனை, மாடு உள்ளிட்ட விலங்குகளின் வாலில் பட்டாசுகளைக் கட்டி தொங்க விட்டு வெடிக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
விலங்குகளைத் துன்புறுத்தும் வகையில் பட்டாசுகள் வெடிப்பவர்களைக் கண்காணிக்கும் பணியில் எங்கள் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து புகாரளிக்கவும், காயமடைந்த விலங்குகளுக்கு சிகிச்சையளிக்கவும் 98401 83177, 94441 00287, 044-25611628 என்ற எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
கோழி மற்றும் ஆடு விலங்கு பட்டியலில் இல்லையா? தீபாவளி விருந்துக்கு பலியிட படுகிறதே…..? கால்நடை துயர்துடைப்புக் கழகம்…..கண்துடைப்பு செய்கிறதா…?
மலாயா தமிழரே… இதைத்தான் டபுள் ஸ்டேண்டர்ட் என்று சொல்வது. உண்பதற்காக பிராணிகளின் கழுத்தை ஸ்லோ மோஷனில் வெட்டித் துண்டங்களாக்கி சமைத்து படையல் போட்டால் இந்த கால்நடை துயர்துடைப்புகள் முதல் ஆளாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்து , அதுவும் இந்தியர்கள் பெருநாளில் பெரிய அறிக்கையை வாசிப்பார்களாம். மற்றவர்களின் பெருநாட்களில் இப்படிப்பட்ட அறிக்கைகள் எல்லாம் வருவதில்லையே அது ஏன்? இந்தியர்கள்தாம் அதிகமாக கால்நடைகளுக்குத் துயர் கொடுப்பதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றனவோ? எவனோ ஒரு முட்டாள் தமிழன் சொல்லிவிட்டுப் போன ” கொன்றால் பாவம் தின்றால் போச்சு” என்பதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு , ” அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று” என்றும், ” கொல்லான் புலானை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” என்றும் சொன்ன வள்ளுவனின் வாக்கைத் தூக்கி குப்பையில் போட்டோம்! இவ்வளவு பாவத்தையும் செய்துவிட்டு நம்மவர்கள் இறைவனிடம் அருள்வேண்டி பவிசாக கண்ணீர் கசிந்துருகி நிற்பர். இப்படிப்பட்டவர்களை நோக்கி வள்ளுவர் சொல்கிறார் … ” தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்? ” என்று கேட்கிறார். தமிழர்களே விழிப்படைவீராக!
உலகத்தில் சைவ சமயத்தின் … புத்தர்களின்… இந்த ஒரு கொள்கைக்காகவே அவர்களுக்குத் தலைவணங்கலாம்! தேனீக்கும் சில உண்மையான தமிழ் அன்பர்களுக்கும் நான் ஏன் தீபாவளி வாழ்த்தினைத் தெரிவிக்கவில்லை என்பதை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். நன்றி! வாழ்க வள்ளுவம்! வளர்க தமிழினம்!
கடந்த 2 நாட்களாக தமிழ் நாட்டில் வாழும் இந்துக்கள் தீபாவளி என்றால் புத்தாடை அணிந்து, சர வெடி வெடித்து, கடமைக்காக ஆலயத்திர்க்குச் சென்று வழிபாடு செய்து வருவதுதான் தீபாவளி திருநாள் என்று கொண்டாடி வருவதை தமிழக தொலைக்காட்சிகளில் கண்டோம். இங்கேயும் அதே நிலைதான். பணமிருந்தால் அன்றாடம் தீபாவளி என்பதற்கும் மேற்கூறிய காட்சிக்கும் வேறுபாடு இல்லை என்பதால், தீபாவளி அர்த்தமற்ற விழாவாக கொண்டாடப் படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை தமிழரே. தங்களைப் புரிந்துக் கொண்டோம்.
தீபாவளி என்பது இன்றைய நாளில் அரசியல்வாதிகளின் சுயவிளம்பர நாளாகிவிட்டது.வியாபாரிகள் தள்ளுபடி என்ற பேரில் கிடங்குகளில் கிடப்பவற்றை விற்று தீர்க்கும் நாள்.நடுத்தர மக்களும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் கடன்படும் நாள்.மதுவிற்காகவும் பட்டாசுகளுக்காகவும் பணத்தை தண்ணிராக இரைக்கும் நாள்.இதன் பின் விளைவுகளாக விபத்துகள் பல நடந்தும், வருடத்திற்கு ஒருமுறை தானே என்று பொறுப்பற்று கடக்கும் நாள்.சிலரை கேட்டால் உறவுகள் அனைவரையும் சந்திக்கும் ஒரே நாள் இது என்று சிந்திக்க மறந்த முட்டாள்களாக கதைப்பார்கள்.உறவுகளிடையே புரிந்துணர்வு இருக்குமெனில் அவர்கள் எந்த நாளிலும் முடிவெடுத்து ஒன்று கூடலாமே……..இவர்களின் மகிழ்ச்சி ஐந்தறிவு விலங்குகளை பலியிட்டு ருசிப்பதில் இருப்பது என்பது இன்னும் வேடிக்கையான ஒன்று.நரகாசுரன் அசுரனாம், அவன் கொடியவனாம், கொல்லும் மனம் படைத்தவனாம்……அவனின் அழிவால் விடியல் ஏற்பட தீபாவளியாம்…வேடிக்கையாக இருக்கிறது இன்று…கொன்றவனுக்காக கொண்டாடப்படும் தீபாவளியில்…யார் கொடியவன் என்பதே குழப்பமாக இருக்கிறது…இன்றைய தீபாவளி கலாச்சாரத்தில் விடியல் என்ற குறிபிட்ட விசயம் எங்கே?